பதம் 9

வைகுண்டாஜ் ஜனிதோ வரா மது-புரீ தத்ராபி ராஸோத்சவாத்
வ்ருந்தாரண்யம் உதார-பாணி-ரமணாத் தத்ராபி கோவர்தன:
ராதா-குண்டம் இஹாபி கோகுல-பதே:ப்ரேமாம்ருதாப்லாவனாத்
குர்யாத் அஸ்ய விராஜதோ கிரி-தடே சேவாம் விவேகீ ந க:
Synonyms: 
வைகுண்டாத் — ஆன்மீக லோகமான வைகுண்டத்தை விட; ஜனித: — பிறந்ததால்; வரா — சிறந்தது; மதுபுரீ — மதுரா என்னும் திவ்ய நகரம்; தத்ரா அபி — அதைவிட உயர்ந்தது; ராஸ உத்சவாத் — ராஸ லீலை புரிந்ததால்; வ்ருந்தாரண்யம் — விருந்தாவன வனம்; உதார-பாணி — பகவான் கிருஷ்ணரின்; ரமணாத் — பலவிதமான அன்பு லீலைகளால்; தத்ராஅபி — அதை விட உயர்ந்தது; கோவர்தன: — கோவர்தன மலை; ராதா குண்டம் — ராதா குண்டம் என அழைக்கப்படும் இடம்; இஹ அபி — அதைவிட உயர்ந்தது; கோகுல பதே: — கோகுலத்தின் தலைவரான கிருஷ்ணர்; ப்ரேம அம்ருத — உன்னத அன்பின் அம்ருதத்துடன்; ஆப்லாவனாத் — மிதமிஞ்சி இருப்பதால்; குர்யாத் — செய்வார்; அஸ்ய — ராதா குண்டத்தின்; விராஜத: — இருப்பது; கிரிதடே — கோவர்தன மலையின் அடியில்; சேவாம் — சேவை; விவேகீ — அறிவாளியானவர்; — அல்ல; க: — எவர்.
Translation: 
பகவான் தோன்றிய காரணத்தினால் புனிதத்தலமான மதுரா, திவ்ய லோகமான வைகுண்டத்தைவிட தெய்வீகமாக உயர்ந்தது. கிருஷ்ணரின் ராச-லீலையினால் திவ்ய வனமான விருந்தாவனம் மதுராபுரியைவிட உயர்ந்தது. ஸ்ரீ கிருஷ்ணரின் திருக்கையினால் உயர்த்தப்பட்டதும் அவரது அன்பு லீலைகளின் தலமாக விளங்கியதுமான கோவர்தனகிரியானது விருந்தாவன வனத்தை விட உயர்ந்தது. எல்லாவற்றிற்கும் மேலாக, கோகுலத்தின் பகவானான ஸ்ரீ கிருஷ்ணரின் அமுதப் பிரேமையினால் மிதமிஞ்சியிருக்கும் மிகமிக உயர்ந்த ஸ்ரீ-ராதா-குண்டமானது மிகமிக மேலானது. கோவர்தன கிரியின் அடிவாரத்தில் உள்ள திவ்யமான ஸ்ரீ ராதா குண்டத்திற்கு சேவை புரிய மனமில்லாத அறிவுள்ள மனிதர் எவரேனும் உண்டோ?
Purport: 

முழுமுதற் கடவுளின் மொத்த படைப்பில் மிக உயர்ந்த பகுதியான ஆன்மீக உலகம் இயற்கையானவே ஜட உலகத்தை விட மேலானது. எனினும் மதுராவும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளும் ஜட உலகில் அமைந்திருந்தாலும் முழுமுதற் கடவுள் தோன்றியதால் ஆன்மீக உலகை விட அது மேலானது என கருதப்படுகிறது. பகவானின் பல்வேறு லீலைகளினால் புகழ் பெற்ற தாலவனம், மதுவனம் மற்றும் பஹுலாவனம் போன்ற பன்னிரண்டு வனங்கள் (த்வாதஷ-வன) கொண்டதால், விருந்தாவனத்தின் உள்வனங்கள் மதுராவை விட மேலானதாகக் கருதப்படுகிறது.

 ஆனால் கிருஷ்ணரின் தாமரையைப் போன்ற திருக்கையினால் சினங்கொண்ட-தேவர் தலைவனான இந்திரனால் அனுப்பப்பட்ட பெருமழையிலிருந்து தனது சுற்றத்தினரையும் வ்ரஜபூமியின் மக்களையும் காக்க ஒரு குடையைப் போல உயர்த்தப்பட்ட கோவர்தன கிரியானது அவற்றை விட உயர்ந்தது. கோவர்தன கிரியில் தான் கிருஷ்ணர் தனது தோழர்களுடன் பசுக்களை பார்த்துக் கொண்டார். கோவர்தன கிரியில் தான் கிருஷ்ணர் அவருக்கு மிகவும் பிரியமான ஸ்ரீ ராதாவுடன் சேர்ந்து அன்பு லீலைகளில் ஈடுபட்டார்.

ஆனால் கோவர்தன கிரியின் அடிவாரத்தில் உள்ள ராதா-குண்டமானது அனைத்திற்கும் மேலானது. ஏனெனில் அங்குதான் கிருஷ்ணரின் அன்பு மிதமிஞ்சி இருக்கிறது. கிருஷ்ணருக்கும் - ராதாராணிக்கும் இடையேயான நித்யமான அன்புலீலைகளை (ரதி-விலாச) நினைவுபடுத்திக் கொண்டே இருப்பதால் மிகவுயர்ந்த பக்தர்கள் ராதா-குண்டத்தில் வசிக்கவே விரும்புவர்.

ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு முதன் முதலில் வ்ரஜபூமிக்கு வந்தபோது ராதா-குண்டத்தை முதலில் கண்டு பிடிக்க இயலவில்லை என சைதன்ய-சரிதாம்ருதத்தில் (மத்ய-லீலா) கூறப்பட்டுள்ளது. ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு ராதா-குண்டத்தின் மிகச்சரியான இருப்பைத் தேடிக் கொண்டிருந்தார் என்பதை இதன் மூலம் அறியலாம். இறுதியில் அவர் அப்புனிதத்தலத்தைக் கண்டுபிடித்த போது அங்கே ஒரு சிறிய குளம் இருந்தது. அவர் அக்குளத்தில் நீராடிய பின்னர் தனது பக்தர்களிடம் உண்மையான ராதா-குண்டம் அங்கே தான் உள்ளது என்றார். பின்னர் அக்குளமானது பகவான் சைதன்யரின் பக்தர்களால் ரூப ரகுநாத தாஸ கோஸ்வாமிகள் உட்பட ஆறு கோஸ்வாமிகளின் தலைமையில் சீர் செய்யப்பட்டது. தற்பொழுது அங்கே ராதா குண்டம் எனப்படும் பெரிய ஏரி உள்ளது. ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு ராதா-குண்டத்தைக் கண்டுபிடித்தறிய மிக ஆர்வங்கொண்ட காரணத்தினால் ஸ்ரீல ரூப கோஸ்வாமி ராதா- குண்டத்திற்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுத்துள்ளார். யார்தான் ராதாகுண்டத்தை விட்டு வேறு எங்காது வசிக்க விரும்புவர்? திவ்ய அறிவுடைய எவரும் இவ்வாறு செய்ய மாட்டார்கள். ராதாகுண்டத்தின் உன்னதத் தன்மையையும் முக்கியத்துவத்தையும் மற்ற வைஷ்ணவ சம்பிரதாயங்களாலும், பகவான் சைதன்ய மஹாபிரபுவின் பக்தித் தொண்டில் ஆர்வமற்ற எவராலும் உணர்ந்து கொள்ளவியலாது. பகவான் ஸ்ரீ கிருஷ்ண சைதன்ய மஹா பிரபுவை பின்பற்றுபவர்களான கௌடீய வைஷ்ணவர்களால் தான் ராதா-குண்டமானது முக்கியமாக வழிபடப்படுகிறது.