Bg 6.47

யோகினாம் அபி ஸர்வேஷாம்
மத்-கதேனாந்தர்-ஆத்மனா
ஷ்ரத்தாவான் பஜதே யோ மாம்
ஸ மே யுக்ததமோ மத:
Synonyms: 
யோகினாம் — யோகிகளில்; அபி — மேலும்; ஸர்வேஷாம் — எல்லாவித; மத்-கதேன — என்னில் நிலைத்த, எப்போதும் என்னையே எண்ணிக் கொண்டுள்ள; அந்த:-ஆத்மனா — தனக்குள்; ஷ்ரத்தாவான் — முழு நம்பிக்கையுடன்; பஜதே — திவ்யமான அன்புத் தொண்டு புரிகிறான்; ய: — எவனொருவன்; மாம் — எனக்கு (முழுமுதற் கடவுளுக்கு); ஸ: — அவன்; மே — என்னால்; யுக்த-மத: — மிகச்சிறந்த யோகியாக; மத: — கருதப்படுகிறான்.
Translation: 
மேலும், எல்லா யோகிகளுக்கு மத்தியில், எவனொருவன் பெரும் நம்பிக்கையுடன் எப்போதும் என்னில் நிலைத்து, தன்னுள் என்னை எண்ணி, எனக்கு திவ்யமான அன்புத் தொண்டு புரிகின்றானோ, அவனே யோகத்தில் என்னுடன் மிகவும் நெருங்கியவனும் எல்லாரையும்விட உயர்ந்தவனும் ஆவான். இதுவே எனது அபிப்பிராயம்.
Purport: 

பஜதே என்னும் சொல் இங்கு மிகவும் முக்கியமானதாகும். பஜதே என்னும் சொல், பஜ் என்னும் வினைச்சொல்லிலிருந்து வருவது. இவ்வினைச்சொல் 'சேவை ' என்னும் பொருளில் உபயோகிக்கப்படுவதாகும். "வழிபடுதல்" எனும் தமிழ் சொல் பஜ் எனும் பொருளில் உபயோகப்படுத்த முடியாததாகும். வழிபடுதல் என்றால் தகுந்த நபருக்கு மதிப்பும் மரியாதையும் அளித்து வணங்குவது என்று பொருள். ஆனால் அன்புடனும் நம்பிக்கையுடனும் தொண்டு புரிவது என்பது புருஷோத்தமரான முழுமுதற் கடவுளுக்கு மட்டுமே உரியதாகும். ஒருவன் மதிப்புமிக்க மனிதனையோ, தேவரையோ வழிபடாமல் இருக்க முடியும், அவனை பண்பற்றவன் என்று அழைக்கலாம்; ஆனால் முழு முதற் கடவுளுக்குத் தொண்டு புரிவதை எவரும் தவிர்க்க முடியாது, அவ்வாறு தவிர்ப்பவன் கடுமையான இகழ்ச்சிக்கு உள்ளாவான். ஒவ்வொரு உயிர்வாழியும் பரம புருஷ பகவானின் அம்சம் என்பதால், அவர்கள் ஒவ்வொருவரும் தங்களது ஸ்வரூப நிலையில் முழுமுதற் கடவுளுக்கு தொண்டாற்ற கடமைப்பட்டவர்கள். இவ்வாறு செய்யத் தவறுபவன் வீழ்ச்சியடைகிறான். பாகவதம் (11.5.3) இதனைப் பின்வருமாறு உறுதிப்படுத்துகின்றது:

ய ஏஷாம் புருஷம் ஸாக்ஷாத்
ஆத்ம-ப்ரபவம் ஈஷ்வரம்
ந பஜந்த்-யவஜானந்தி ஸ்தானாத்
ப்ரஷ்டா: பதந்த்-யத:

"எல்லா உயிர்வாழிகளின் மூலமான ஆதி புருஷருக்கு தொண்டு செய்வது எனும் தனது கடமையை நிராகரிப்பவன், எவனாக இருந்தாலும், அவன் நிச்சயமாக தனது ஸ்தானத்திலிருந்து வீழ்ச்சியடைவான்."

இந்தப் பதத்திலும் பஜந்தி எனும் சொல் உபயோகிக்கப்பட்டுள்ளது. எனவே, பஜந்தி எனும் சொல் பரம புருஷ பகவானுக்கு மட்டுமே பொருந்துவதாகும், ஆனால் "வழிபடுதல்" எனும் சொல்லை தேவர்களுக்கோ, சாதாரண ஓர் உயிர்வாழிக்கோ கூட உபயோகிக்கலாம். ஸ்ரீமத் பாகவதத்தின் இப்பதத்தில் உபயோகிக்கப்பட்டுள்ள அவஜானந்தி எனும் சொல் பகவத் கீதையிலும் காணப்படுகின்றது. அவஜானந்தி மாம் மூடா:—"மூடர்களும் அயோக்கியர்களும் மட்டுமே புருஷோத்தமரான முழுமுதற் கடவுள் ஸ்ரீ கிருஷ்ணரை இழிந்துரைக்கின்றனர்." பகவானுக்குத் தொண்டு செய்யும் மனப்பான்மை இல்லாத இத்தகு மூடர்கள், பகவத் கீதைக்கு வியாக்கியானம் எழுதத் தொடங்கி விடுகின்றனர். இதன் காரணத்தால் பஜந்தி எனும் சொல்லுக்கும், "வழிபடுதல்" எனும் சொல்லுக்கும் உள்ள வேறுபாட்டை அவர்களால் முறையாக காண முடிவதில்லை.

எல்லா யோகப் பயிற்சிகளும் பக்தி யோகத்தில் நிறைவு பெறுகின்றன. மற்ற எல்லா யோகங்களும் பக்தி யோகத்தில் உள்ள பக்தி எனும் நிலைக்கு வருவதற்கான முறைகளேயாகும். யோகம் என்றால் உண்மையில் பக்தி யோகம்தான்; மற்ற யோகங்கள் அனைத்தும் பக்தி யோகம் எனும் இலக்கை நோக்கிய படிக்கற்களே. கர்ம யோகத்தில் தொடங்கி பக்தி யோகத்தில் முடியக்கூடிய ஆன்மீகத் தன்னுணர்வுப் பாதை மிகவும் நீண்டதாகும். பலனை எதிர்பார்க்காமல் செய்யப்படும் கர்ம யோகம் இப்பாதையின் ஆரம்பமாகும். கர்மயோகம், ஞானத்திலும் துறவிலும் உயர்ச்சிபெறும்போது, அந்நிலை ஞான யோகம் என்று அழைக்கப்படுகின்றது. ஞான யோகம், பல்வேறு உடல்நிலை முறைகளால் பரமாத்மா மீதான தியானத்தில் உயர்ச்சி பெற்று, மனம் அவரில் நிலைபெறும்போது, அந்நிலை அஷ்டாங்க யோகம் எனப்படுகின்றது. மேலும், எப்போது ஒருவன் அஷ்டாங்க யோகத்தையும் தாண்டி, பரம புருஷ பகவானான கிருஷ்ணரை அடைகின்றானோ, அந்த இறுதி நிலை பக்தி யோகம் என்று அழைக்கப்படுகின்றது. உண்மையில், பக்தி யோகமே இறுதிக் குறிக்கோளாகும், ஆனால் பக்தி யோகத்தை நுண்மையாக ஆய்வதற்கு மற்ற யோகங்களையும் புரிந்து கொள்ள வேண்டும். எனவே, முன்னேற்றப் பாதையில் உள்ள யோகி, நித்தியமான நல்ல அதிர்ஷ்டமான பாதையில் உள்ளான். ஒரு குறிப்பிட்ட நிலையில் பற்றுக் கொண்டு, அந்நிலையிலிருந்து முன்னேற்றமடையாமல் இருக்கும் யோகி, அந்த குறிப்பிட்ட பெயரால் (கர்ம யோகி, ஞான யோகி, அல்லது, தியான யோகி, ராஜ யோகி, ஹட யோகி போன்ற பல பெயர்களில்) அழைக்கப்படுகின்றான். பக்தி யோக நிலைக்கு வருமளவிற்கு ஒருவன் அதிர்ஷ்டம் பெற்றிருந்தால், அவன் மற்ற யோகங்கள் அனைத்தையும் கடந்து விட்டவனாக அறியப்பட வேண்டும். எனவே, கிருஷ்ண உணர்வே யோகத்தின் மிக உன்னத நிலையாகும். நாம் இமயமலை என்று குறிப்பிடும்போது உலகின் மிகவுயர்ந்த மலையைக் குறிப்பிடுகிறோம், அதில் மிகவுயர்ந்த சிகரமான எவரெஸ்ட், இறுதியாக கருதப்படுவதுபோல, யோகங்களில் உயர்ந்தது பக்தி யோகம்.

பக்தி யோகத்தின் பாதையில் கிருஷ்ண உணர்விற்கு வருவதற்கு ஒருவன் மிகவும் நல்லதிர்ஷ்டம் செய்திருக்க வேண்டும், இந்த பக்தி யோக்தின் மூலம், வேதங்களின் வழிகாட்டுதலின் அடிப்படையில் அவன் நன்றாக நிலை பெற்று வாழ முடியும். ஒரு சீர்மிகு யோகி, சியாமசுந்தரர் என்று அழைக்கப்படும் கிருஷ்ணரின் மீது தனது கவனத்தை ஒருமுகப்படுத்த வேண்டும். அவர், தனது அழகிய மேக வர்ண திருமேனியுடனும், சூரியனைப் போன்று பிரகாசிக்கும் தாமரை முகத்துடனும், ஆபரணங்களுடனும், பிரகாசிக்கும் உடைகளுடனும், பூ மாலைகளால் அலங்கரிக்கப்பட்டும் காட்சியளிக்கின்றார். பிரம்மஜோதி என்றழைக்கப்படும் தனது பிரமாண்டமான தேஜஸின் மூலம் அவர் எல்லா திசைகளையும் பிரகாசப்படுத்துகிறார். அவர், இராமர், நரசிம்மர், வராஹர், பரம புருஷ பகவானான கிருஷ்ணர் போன்ற பல்வேறு ரூபங்களில் அவதரிக்கின்றார். அவர் சாதாரண மனிதனைப்போல அன்னை யசோதையின் மைந்தனாகத் தோன்றுகிறார், மேலும், கிருஷ்ணர், கோவிந்தன், வாசுதேவர் எனப் பல்வேறு பெயர்களால் அறியப்படுகிறார். அவரே பக்குவமான குழந்தை, கணவர், நண்பர், மற்றும் எஜமானர்; அவர் எல்லாவித பைவங்களும் திவ்ய குணங்களும் நிரம்பப் பெற்றவர். பகவானின் இத்தகு இயல்புகளைப் பற்றிய பூரண உணர்வில் இருப்பவன், மிக உன்னதமான யோகி என்று அழைக்கப்படுகின்றான்.

யோகத்தின் இத்தகு உயர்ந்த பக்குவநிலை பக்தி யோகத்தில் மட்டுமே அடையப்படக் கூடியது. இஃது எல்லா வேத இலக்கியங்களிலும் உறுதி செய்யப்பட்டுள்ளது:

யஸ்ய தேவே பரா பக்திர்
யதா தேவே ததா கு ரௌ
தஸ்யைதே கதிதா ஹ்யர்தா:
ப்ரகாஷந்தே மஹாத்மன:

"இறைவனிடமும் ஆன்மீக குருவிடமும் அசையாத நம்பிக்கையுடைய மகாத்மாக்களுக்கு மட்டுமே, வேத ஞானத்தின் முக்கியக் கருத்துக்கள் அனைத்தும் தாமாகவே வெளிப்படுத்தப்படுகின்றன." (ஷ்வேதாஷ்வதர உபநிஷத் 6.23)

பக்திர் அஸ்ய பஜனம் தத் இஹாமுத்ரோபாதி-நைராஸ்யேனாமுஷ்மின் மன:-கல்பனம், ஏதத் ஏவ நைஷ்கர்ம்யம். "பக்தி என்றால், இப்பிறவி, மறுபிறவி இரண்டிற்குமான எல்லாவித ஜட இலாப ஆசைகளிலிருந்தும் விடுபட்டு, பகவானுக்கு அன்புத் தொண்டு புரிவதாகும். அத்தகு ஆசைகள் ஏதுமின்றி மனதை முழுமையாக பரம புருஷ பகவானிடம் அர்ப்பணிக்க வேண்டும். இதுவே நைஷ்கர்ம்ய என்பதன் நோக்கமாகும்." (கோபால-தாபனீ உபநிஷத் 1.15)

இவையே, யோக முறையின் மிகவுயர்ந்த பக்குவ நிலையான பக்தியை (கிருஷ்ண உணர்வினை) செயலாற்றும் முறைகளில் சிலவாகும்.

ஸ்ரீமத் பகவத் கீதையின் "தியான யோகம்" என்னும் ஆறாம் அத்தியாயத்திற்கான பக்தி வேதாந்த பொருளுரைகள் இத்துடன் நிறைவடைகின்றன.