Bg 15.6

ந தத் பாஸயதே ஸூர்யோ
ந ஷஷாங்கொ ந பாவக:
யத் கத்வா ந நிவர்தந்தே
தத் தாம பரமம் மம
Synonyms: 
— இல்லை; தத் — அந்த; பாஸயதே — பிரகாசப்படுத்துவது; ஸூர்ய: — சூரியன்; — இல்லை; ஷஷாங்க: — சந்திரன்; — இல்லை; பாவக: — நெருப்பு, மின்சாரம்; யத் — எங்கே; கத்வா — சென்றபின்; — ஒருபோதும் இல்லை; நிவர்தந்தே — அவர்கள் திரும்பி வருவது; தத்தாம — அந்த இருப்பிடம்; பரமம் — பரமம்; மம — எனது.
Translation: 
எனது அந்த பரம வாசஸ்தலம் சூரியனாலோ, சந்திரனாலோ, நெருப்பினாலோ, மின்சாரத்தினாலோ ஒளியூட்டப்படுவது இல்லை. அதனை அடைபவர்கள் ஒருபோதும் இந்த ஜட உலகிற்குத் திரும்புவதில்லை.
Purport: 

புருஷோத்தமரான முழுமுதற் கடவுள் கிருஷ்ணரின் வாசஸ்தலம் இங்கு விவரிக்கப்படுகின்றது. அந்த ஆன்மீக உலகம், கிருஷ்ண லோகம் என்றும் கோலோக விருந்தாவனம் என்றும் அறியப்படுகின்றது. ஆன்மீக வானில், சூரிய ஒளி, சந்திர ஒளி, நெருப்பு மற்றும் மின்சாரத்திற்கு அவசியம் இல்லை; ஏனெனில், அங்குள்ள எல்லா கிரகங்களும் சுயமாகவே பிரகாசமுடையவை. இப்பிரபஞ்சத்தில், சுயமாக பிரகாசிக்கக்கூடிய கிரகமாக, சூரிய கிரகம் மட்டுமே உள்ளது, ஆனால் ஆன்மீக வானிலுள்ள எல்லா கிரகங்களும் சுயமாக பிரகாசிப்பவை. வைகுண்டங்கள் என்று அழைக்கப்படும் அந்த கிரகங்களின் பிரகாசமே பிரம்மஜோதி எனப்படும் பேரொளியாகும். உண்மையில், அந்த ஒளி கிருஷ்ணரின் லோகமான கோலோக விருந்தாவனத்திலிருந்து வெளிவருகின்றது. ஒளிரும் அந்த ஜோதியின் ஒரு பகுதி, மஹத் தத்துவத்தினால் (ஜடவுலகினால்) மறைக்கப்பட்டுள்ளது. இதைத் தவிர, அந்த ஒளிரும் வானத்தின் பெரும்பாலான பகுதி, வைகுண்டங்கள் என்று அழைக்கப்படும் ஆன்மீக கிரகங்களால் நிறைந்துள்ளது. அவற்றில் முதன்மையானது கோலோக விருந்தாவனம்.

இந்த இருண்ட ஜடவுலகில் இருக்கும் வரை, ஜீவாத்மா கட்டுண்ட வாழ்வில் உள்ளான், ஆனால் இந்த ஜடவுலகின் பொய்யான திரிபடைந்த மரத்தை வெட்டிவிட்டு ஆன்மீக வானத்தை அடைந்தவுடன் அவன் முக்தி பெறுகின்றான். பின்னர் அவன் மீண்டும் இங்கு வருவதற்கான வாய்ப்பு இல்லை. கட்டுண்ட வாழ்வில், உயிர்வாழி தன்னை இந்த ஜடவுலகின் எஜமானனாகக் கருதுகின்றான், ஆனால் முக்திபெற்ற நிலையிலோ அவன் ஆன்மீக ராஜ்ஜியத்தில் நுழைந்து பரம புருஷருடன் உறவு கொள்கின்றான். அங்கே அவன் நித்தியமான ஆனந்தம், நித்தியமான வாழ்வு, மற்றும் நித்தியமான ஞானத்தினை அனுபவிக்கின்றான்.

இத்தகவலை கேட்டு ஒருவன் கவரப்பட வேண்டும். அந்த நித்திய உலக்திற்குத் தன்னை மாற்றிக் கொள்ளவும் உண்மையின் இந்த பொய்யான பிம்பத்திலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ளவும் அவன் ஆர்வத்துடன் இருக்க வேண்டும். இந்த ஜடவுலகில் மிகுந்த பற்றுக் கொண்டிருப்பவனுக்கு அந்த பற்றுதலைத் துண்டித்தல் மிகவும் கடினம்; ஆனால் அவன் கிருஷ்ண உணர்வை மேற்கொண்டால், படிப்படியாக பற்றின்மையை அடைவதற்கு வாய்ப்புள்ளது. கிருஷ்ண உணர்வில் இருக்கும் பக்தர்களுடன் அவன் தொடர்புகொள்ள வேண்டும். கிருஷ்ண உணர்விற்காக அர்ப்பணிக்கப்பட்ட ஓர் இயக்கத்தைத் தேடி, பக்தித் தொண்டினை செயலாற்றுவது எவ்வாறு என்பதைக் கற்க வேண்டும். இவ்வாறு ஜடவுலகின் மீதான தனது பற்றுதலை அவன் துண்டித்துக்கொள்ள முடியும். வெறும் காவி உடையை அணிவதால் ஜடவுலகின் கவர்ச்சியிலிருந்து விடுபட முடியாது. பகவானின் பக்தித் தொண்டில் பற்றுள்ளவனாக அவன் ஆக வேண்டியது அவசியம். எனவே, பன்னிரண்டாம் அத்தியாயத்தில் விவரிக்கப்பட்டுள்ள பக்தித் தொண்டே உண்மையான மரத்தின் இந்த பொய் பிம்பத்திலிருந்து வெளியேறுவதற்கான ஒரே வழி என்பதை அறிந்து, ஒருவன் அதனை மிகவும் தீவிரமாக ஏற்றுக் கொள்ள வேண்டும். இதர வழிமுறைகள் அனைத்திலும் உள்ள ஜட இயற்கையின் களங்களைப் பற்றி பதினான்காம் அத்தியாயத்தில் விவரிக்கப்பட்டது. பக்தித் தொண்டு மட்டுமே பூரண தெய்வீகத் தன்மையை உடையதாக அங்கே விளக்கப்பட்டது.

பரமம் மம என்னும் சொற்கள் இங்கே மிகவும் முக்கியமானவை. உண்மையில் ஒவ்வொரு மூலைமுடுக்கும் பரம புருஷருடைய சொத்தாகும், ஆனால் ஆன்மீக உலகம் பரமமானது, ஆறு வைபவங்களைப் பூரணமாகக் கொண்டது. ஆன்மீக உலகில் சூரிய ஒளி, சந்திர ஒளி அல்லது நட்சத்திரங்களின் அவசியம் இல்லை (ந தத்ர ஸூர்யோ பாதி ந சந்த்ர-தாரகம்) என்று கட உபநிஷத்திலும் (2.2.15) கூறப்பட்டுள்ளது. ஏனெனில், ஆன்மீக வெளி முழுதும் பரம புருஷரின் அந்தரங்க சக்தியினால் பிரகாசப்படுத்தப்பட்டுள்ளது. சரணடைவதால் மட்டுமே அந்த பரம வாசஸ்தலம் அடையப்படக் கூடியது, வேறு வழிகளால் அல்ல.