Bg 1.36

பாபம் ஏவாஷ்ரயேத் அஸ்மான்
ஹத்வைதான் ஆததாயின:
தஸ்மான் நார்ஹா வயம் ஹந்தும்
தார்தராஷ்ட்ரான் ஸ-பாந்தவான்
ஸ்வ-ஜனம் ஹி கதம் ஹத்வா
ஸுகின: ஸ்யாம மாதவ
Synonyms: 
பாபம் — பாவங்கள்; ஏவ — நிச்சயமாக; ஆஷ்ரேயத் — வந்தடையும்; அஸ்மான் — நன்மை; ஹத்வா — கொல்வதால்; ஏதான் — இவர்களையெல்லாம்; ஆததாயின: — அக்கிரமக்காரர்கள்; தஸ்மாத் — அதனால்; — என்றுமில்லை; அர்ஹா: — தகுதியுடைய; வயம் — நாம்; ஹந்தும் — கொல்ல; தார்தராஷ்ட்ரான் — திருதராஷ்டிரரின் மகன்கள்; -பாந்தவான் — நண்பர்களுடன்; ஸவ-ஜனம் — உறவினர்கள்; ஹி — நிச்சயமாக; கதம் — எவ்வாறு; ஹத்வா — கொல்வதால்; ஸுகின: — மகிழ்ச்சி; ஸ்மாம — நாம் அடைவோம்; மாதவ — அதிர்ஷ்ட தேவதையின் நாயகரே (கிருஷ்ணரே).
Translation: 
இத்தகைய அக்கிரமக்காரர்களைக் கொல்வதால் நமக்கு பாவமே வந்து சேரும். எனவே, திருதராஷ்டிரர் மகன்களையும் நமது நண்பர்களையும் கொல்லுதல் நமக்குச் சரியானதல்ல. அதிர்ஷ்ட தேவதையின் கணவரே, கிருஷ்ணரே, நமது சொந்த உறவினரைக் கொலை செய்துவிட்டு நாம் எவ்வாறு மகிழ்ச்சியடைய முடியும்? இதனால் நமக்கென்ன லாபம்?
Purport: 

வேத விதிகளின்படி அக்கிரமக்காரர்கள் ஆறு வகையினர்: (1) விஷம் கொடுப்பவர் (2) வீட்டிற்கு நெருப்பு வைப்பவர் (3) பயங்கர ஆயுதங்களால் தாக்குபவர் (4) செல்வத்தைக் கொள்ளையடிப்பவர் (5) பிறர் நிலத்தை ஆக்கிரமிப்பவர் (6) பிறர் மனைவியை கடத்தி செல்பவர். இந்த ஆக்கிரமக்காரர்களை உடனே கொல்லலாம், அதனால் பாவம் ஏதுமில்லை. இவ்வாறு அக்கிரமக்காரர்களைக் கொல்லுதல் எல்லா சாதாரண மனிதர்களுக்கும் பொருந்தும், ஆனால் அர்ஜுனன் சாதாரண மனிதனல்ல. அவன் குணத்தால் சாதுவாக இருந்ததால், அவர்களிடம் நற்குணங்களோடு உறவுகொள்ள நினைத்தான். இருப்பினும் இவ்வாறான சாதுத்தனம் ஒரு சத்திரியனுக்கு உரியதல்ல. ஆட்சியில் இருக்கும் பொறுப்பான மனிதன் சாதுவின் குணங்களுடன் இருக்க வேண்டும் என்றபோதிலும், கோழையான இருக்கக் கூடாது. உதாரணமாக, பகவான் இராமரிடம் சாதுவின் குணங்கள் பொதிந்திருந்த காரணத்தினால், இன்றும் மக்கள் அவரது அரசாங்கத்தில் (இராம ராஜ்ஜியத்தில்) வாழ விரும்புகின்றனர். ஆனால் பகவான் இராமர் ஒருபோதும் கோழைத்தனத்தைக் காட்டவில்லை. இராமரின் மனைவி சீதையைக் கடத்திச் சென்ற இராவணன் அவருக்கு அக்கிரமம் இழைத்தவனாவான். ஆதனால் அவர் அவனுக்கு உலக சரித்திரத்தில் இணையற்ற, தேவையான பாடத்தை நன்கு கற்பித்தார். இருப்பினும், அர்ஜுனனின் விஷயத்தில் அக்கிரமக்காரர்கள், வித்தியாசமானவர்கள்—சொந்த பாட்டனார், சொந்த ஆச்சாரியர், நண்பர்கள், மகன்கள், பேரன்கள் முதலியோர்—என்பதைக் கருத வேண்டும். அதனால் அவர்களின் மீது சாதாரண அக்கிரமக்காரர்களின் மீது தீவிர நடவடிக்கை எடுப்பதைப் போல செயல்படக் கூடாது என்று அர்ஜுனன் எண்ணினான். அதற்கும் மேலாக, சாதுக்கள் மன்னிக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகின்றனர். எந்த அரசியல் அவசர நிலைமையையும்விட சாதுக்களைப் பொறுத்தவரையில் இத்தகைய அறிவுரைகளே முக்கியமானவை. அரசியல் காரணங்களுக்காக சொந்த உறவினர்களைக் கொல்வதைக் காட்டிலும், நற்குணத்தையும் தர்மத்தையும் அடிப்படையாகக் கொண்டு அவர்களை மன்னித்துவிடுதல் சிறந்தது என்று எண்ணினான் அர்ஜுனன். தற்காலிகமான உடல் சுகத்திற்காகக் கொலை செய்வதை அவன் இலாபமென்று கருதவில்லை. ராஜ்ஜியங்களும் அவற்றினால் பெறப்படும் சுகங்களும் நிலையானவை அல்ல. அவ்வாறிருக்க உறவினரைக் கொல்வதன் மூலம் தனது சுய வாழ்க்கைக்கும் நித்திய விடுதலைக்கும் ஏன் ஆபத்தை தேடிக்கொள்ள வேண்டும்? இவ்விஷயத்தில் "மாதவ" அல்லது 'அதிர்ஷ்ட தேவதையின் கணவர் ' என்று கிருஷ்ணரை அர்ஜுனன் அழைப்பதும் மிக முக்கியமானதாகும். அதிர்ஷ்ட தேவதையின் கணவரான அவர், இறுதியில் துரதிர்ஷ்டத்தைக் கொடுக்ககூடிய செயலைச் செய்யும்படித் தன்னைத் தூண்டக் கூடாது என்று அர்ஜுனன் சுட்டிக் காட்ட விரும்புகிறான். கிருஷ்ணரோ யாருக்குமே துரதிர்ஷ்டத்தைக் கொடுப்பவரல்ல என்பதால், அவரது பக்தர்கள் விஷயத்தில் சொல்ல வேண்டிய தேவையே இல்லை.