பதம் 10

கர்மிப் ய : பரிதோ ஹரே: ப்ரிய தயா வ்யக்திம்யயுர் ஞானினஸ்;
தேப்யோ ஞான-விமுக்த-பக்தி-பரம: ப்ரேமைக-நிஷ்டாஸ்தத:
தேப்யஸ் தா: பஷு-பால-பங்கஜ-த்ருஷஸ் தாப்யோ-அபி சா ராதிகா
ப்ரேஷ்டா தத்வத் இயம் ததீய-சரஸீ-தாம்-நாஷ்ரயேத் க: க்ருதீ
Synonyms: 
கர்மிப்ய: — பலன் நோக்கிச் செயல்படுபவர்களை விட; பரித: — அனைத்து விதத்திலும்; ஹரே: — முழுமுதற் கடவுளால்; ப்ரியதயா — கருணை காட்டப்பட்டதால்; வ்யக்திம் யயு: — சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது; ஞானீனா: — அறிவிற் சிறந்தோர்; தேப்ய: — அவர்களை விட மேலானோர்; ஞான-விமுக்த — அறிவால் முக்தியடைந்து; பக்தி-பரம: — பக்தித் தொண்டில் ஈடுபட்டோர்; ப்ரேம ஏக-நிஷ்டா: — பகவானின் தூய அன்பை அடைந்தோர்; தேப்ய: — அவர்களினும் சிறந்தோர்; தா: — அவர்கள்; பஷு-பால-பங்கஜ-த்ருஷ: — இடையர் சிறுவனான கிருஷ்ணரையே சார்ந்து வாழும் கோபியர்கள்; தாப்ய: — அவர்களினும் மேலாக; அபி — நிச்சயமாக; சா — அவள்; ராதிகா — ஸ்ரீமதி ராதிகா; ப்ரேஷ்டா — மிகவும் பிரியமான; தத்வத் — அதே போல; இயம் — இது; ததீய-சரஸீ-தாம் — ஸ்ரீ ராதாராணியின் ஏரி, ஸ்ரீ ராதாகுண்டம்; — இல்லை; ஆஸ்ரயேத் — அடைக்கலம் பெறலாம்; க: — யார்; க்ருதீ — மிகவும் அதிர்ஷடமுள்ள.
Translation: 
பலன் நோக்கிக் செயல்படுபவர்களுள், வாழ்க்கையின் உயர் நெறிகளைப் பற்றிய அறிவில் உயர்ந்தோர் முழுமுதற் கடவுளாகிய ஹரியினால் கருணை காட்டப்படுவார் என சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ளது. அறிவில் உயர்ந்தோராகிய (ஞானிகள்) இத்தகைய பலருள் தனது நல்லறிவால் அநேகமாக முக்தியடைந்த ஒருவர் பக்திக் தொண்டு புரியலாம். அவர் மற்றவர்களை விட மேலானவராவார். எனினும் கிருஷ்ணரின் மேல் தூய அன்பு கொண்டோர் அவரை விட உயர்ந்தோராவர். திவ்ய இடைச்சிறுவனான ஸ்ரீ கிருஷ்ணரையே சார்ந்திருப்பதால் கோபியர்கள் எல்லா உயர்ந்த பக்தர்களைவிட மேலானவர்கள் ஆவர். கோபியர்களுள் ஸ்ரீமதி ராதாராணி கிருஷ்ணருக்கு மிகவும் பிரியமானவராவார். ஸ்ரீமதி ராதாராணியைப் போலவே ராதாராணியின் ராதா-குண்டமும் கிருஷ்ணருக்கு மிகவும் பிரியமானதாகும். அஷ்டகாலீய – லீலை அல்லது நித்யமான எட்டுவித தினசரி லீலைகளைப் புரியும் தெய்வீகத்தம்பதிகளான ஸ்ரீ-ஸ்ரீராதா-கோவிந்தனுக்கு பேரானந்த பக்தி உணர்ச்சிகளுடன் (அப்ராக்ருத பாவா) கூடிய, ஆன்மீக உடலுடன் அன்புத் தொண்டு புரியாமல், ராதா-குண்டத்தில் வசிக்காமல் இருப்பவர் எவரேனும் உண்டோ? உண்மையில் ராதா-குண்டத்தின் கரைகளிலிருந்து பக்தித் தொண்டு புரிபவர்கள்தான் இந்த அகிலத்திலேயே அதிர்ஷ்டம் செய்தவர்கள்.
Purport: 

தற்போது, கிட்டத்தட்ட அனைவரும் ஏதாவதொரு பலன்நோக்கு செயலில் ஈடுபட்டுள்ளனர். ஜடலாபத்திற்காக ஆர்வங்கொண்டு வேலை செய்பவர்கள் கர்மிகள் அல்லது பலன்நோக்கிச் செயல்படுபவர்கள் என அழைக்கப்படுகிறார்கள். ஜட உலகத்திலுள்ள அனைத்து உயிர் வாழிகளும் மாயாவிற்கு உட்பட்டவர்களே. இது விஷ்ணு புராணத்தில் (6.7.61) விளக்கப்பட்டுள்ளது.

விஷ்ணு-ஷக்தி பரா ப்ரோக்தா 
க்ஷேத்ரஞாக்யா ததா பரா
அவித்யா-கரம்-சம்ஞான்யா 
த்ருதீயா ஷக்திர் இஷ்யதே

“முனிவர்கள் முழுமுதற் கடவுளின் சக்திகளை ஆன்மீக சக்தி, இடைச் சக்தி, மற்றும் ஜடச் சக்தி என வகுத்துள்ளனர். ஜடச் சக்தியானது மூன்றாம் நிலை சக்தியாகக் (த்ருதீயா ஷக்தி) கருதப்பட வேண்டும். ஜடச்சக்தியின் ஆளுகைக்குட்பட்ட உயிர்வாழிகள் சிலர் நாய்களையும், பன்றிகளையும் போல புலனின்பத்திற்காகக் கடினமாக உழைக்கின்றனர். எனினும் இப்பிறவியிலோ அல்லது நற்காரியங்கள் பல செய்தபின் அடுத்த பிறவியிலோ சில கர்மிகள் வேதங்களில் குறிப்பிடப்பட்டுள்ள பல வகையான யக்ஞங்களை புரிவதில் ஆர்வங்கொண்டுள்ளனர். இவ்வாறு அவர்களது நற்காரியங்களின் பலனால் சொர்க் லோகங்களுக்கு உயர்த்தப் படுகின்றனர். வேதக் கட்டளைகளுக்கேற்ப உறுதியாக யக்ஞங்கள் புரிபவர்கள் சந்திரனுக்கோ அதற்கு மேலே உள்ள லோகங்களுக்கோ உயர்த்தப்படுகின்றனர். ‘க்ஷீணே புண்யே மர்த்யலோகம் விஷந்தி’ நற்காரியங்கள் எனப்படும் செயல்களின் பலன் தீர்ந்தவுடன் அவர்கள் “மர்த்ய லோகம்”, அதாவது இறத்தலின் இருப்பிடமான இவ்வுலகத்திற்கே திரும்ப வேண்டும்.

புண்ணியச் செயல்கள் செய்தாலும், பாவச் செயல்கள் செய்தாலும் எல்லா கர்மிகளின் நிலையும் இது தான். ஜட இன்பத்திலேயே ஆர்வங்கொண்ட வியாபாரிகள், அரசியல் வாதிகள் மற்றும் பலரை நாம் பார்க்கிறோம். அவர்கள் தாங்கள் பொருள் ஈட்டும் முறை நன்முறையா, பாவப்பட்ட முறையா என்பதைப் பாராமல் உழைக்கிறார்கள். இவர்கள் கர்மிகள் அல்லது ஜட மக்கள் என அழைக்கப்படுகின்றனர். இவர்களுள் வேத அறிவின் வழி நடத்துதலில்லாமல் செயல்படுபவர்கள் விகர்மிகளாவர். வேத அறிவின் அடிப்படையில் யக்ஞங்கள் புரிபவர்கள் பகவான் விஷ்ணுவின் மகிழ்ச்சிக்காக அதைச் செய்வதால் அவரிடமிருந்து வரங்கள் பல பெறுகின்றனர். இவ்வகையில் அவர்கள் உயர்லோகங்களுக்கு உயர்த்தப்படுகின்றனர். இத்தகைய கர்மிகள் விகர்மிகளை விட உயர்ந்தவர்கள். ஏனெனில் வேதங்களின் கட்டளைகளுக்கு உண்மையாக இருக்கின்றனர். மேலும் அவர்கள் கிருஷ்ணருக்குப் பிரியமானவர்களும் கூட பகவத் கீதையில், யே யதா மாம் ப்ரபத்யந்தே தாம்ஸ் ததைவ பஜாம் யஹம் “ஒருவன் என்னிடம் சரணடைவதற்கேற்ப நான் அவனுக்கு பலனளிக்கிறேன்” என்று கிருஷ்ணர் கூறுகிறார். கர்மிகள் மற்றும் ஞானிகளின் ஆசைகளைக்கூட பூர்த்தி செய்யும் கருணை கொண்டவர் கிருஷ்ணரெனில் அவரது பக்தர்களைப் பற்றி என்ன சொல்வது? சில கர்மிகள் உயர்லோகங்களுக்கு உயர்த்தப்பட்டாலும் பலன்நோக்கு செயல்களின் மீது பற்று உள்ள வரையில் அவர்கள் இறந்தபின் புது ஜடவுடல்களை ஏற்றுதான் தீர வேண்டும். ஒருவன் நற்காரியங்களோ, புண்ணிய காரியங்களோ செய்தால் உயர்லோகங்களில் தேவர்களிடையே ஒரு புது உடலைப் பெறலாம் அல்லது உயர்தர ஜட இன்பத்தை அனுபவிக்க அவன் வேறு ஒரு நிலையை அடையலாம். அதே சமயம் தீய செயல்களில் ஈடுபட்டுள்ள இழிந்தோர் மிருகங்கள், மரங்கள் மற்றும் செடி கொடிகளாகப் பிறப்பெடுக்க நேரிடும். இவ்வாறு வேத கட்டளைகளை மதிக்காமல் செயல்படும் பலன்நோக்கிச் செயல்படுபவர்கள் (விகர்மிகள்) கற்றறிந்த முனிவர்களால் பாராடடப்படுவதில்லை. ஸ்ரீமத் பாகவத்தில் கூறியுள்ளபடி (5.5.4)

நூனம் ப்ரமத்த குருதே விகர்ம
யதீந்த்ரிய ப்ரீதய ஆப்ர்ணோதி
ந ஸாது மன்யே யத ஆத்மனோ (அ)யம்
அசன்ன பிக்லே ஷத ஆஸ தேஹ:

“நாய்களையும் பன்றிகளையும் போல ஜட மக்கள் புலன் நுகர்வில் பித்து பிடித்தலைகின்றனர். வெறும் புலனின்பத்திற்காக எல்லாவிதமான பாவச் செயல்களையும் அவர்கள் செய்கிறார்கள். நல்லறிவுடைய ஒருவனுக்கு ஜடச் செயல்கள் சற்றும் பொருத்தமானவை அல்ல, ஏனெனில் இத்தகைய செயல்களால் துன்பங்களும் துக்கங்களும் நிறைந்த ஒரு ஜட உடலை அவன்பெற வேண்டியிருக்கும்”.

ஜட வாழ்க்கையுடனே செல்பவையாகிய மூவகைத் துன்பங்களில் இருந்து வெளியேறுவதே மனித வாழ்வின் குறிக்கோளாகும். துரதிர்ஷ்டவசமாக பலன் நோக்கிச் செயல்படுபவர்கள் பணம் ஈட்ட பைத்தியமாக அலைந்து தற்காலிக சுகங்களைப் பெறுவதற்காக அனைத்து விதங்களிலும் முயன்று கீழான பிறப்புகளை அடைகின்றனர். ஜடமக்கள் இந்த உலகில் இன்பமாக இருக்க பல திட்டங்களைத் தீட்டுகின்றனர். அவர்கள், குறிப்பிட்ட வருடங்கள் தான் வாழப் போகிறோம் என்பதை சிந்திப்பதேயில்லை. இறுதியாக இத்தகைய செயல்கள் இறப்பில் முடிவடைகின்றன. தங்களது உடலை விட்டவுடன கீழ்நிலை விலங்குகளாகவோ, மரம், செடி கொடிகளாகவோ பிறப்பெடுக்க நேரிடும் என்பதை ஜடமக்கள் கருத்தில் கொள்வதில்லை. இவ்வாறு வாழ்க்கையின் நோக்கத்தையே அவர்களது செயல்கள் பாழாக்கி விடுகின்றன. அவர்கள் அறியாமையில் பிறப்பது மட்டுமல்ல, வானுயர கட்டிடங்கள், பெரிய கார்கள், கௌரவமிக்க பதவிகள் போன்றவைகளின் வடிவில் ஜட இன்பத்தைப் பெறுவதாக எண்ணி அறியாமைத்தளத்திலேயே உழன்று கொண்டிருக்கின்றனர். அவர்கள் அடுத்த பிறவியில் இழிநிலையை அடைய வேண்டி இருக்குமென்றோ, அவர்களது எல்லா செயல்களும் ‘பராபவா’ அல்லது அவர்களையே முறியடிக்கும் என்பதையோ அவர்கள் அறிவதில்லை. இது தான் ஸ்ரீமத் பாகவத்தின் தீர்ப்பு:
“பராபவஸ் தாவத் அபோத – ஜாட:” (5.5.5)

எனவே ஒருவன் ஆத்ம-விஞ்ஞானத்தை அறிய ஆவலாக இருக்க வேண்டும். ஆத்மாவும் உடலும் ஒன்றல்ல என்பதை அறியச் செய்யும் ஆத்ம-தத்வ நிலைக்கு ஒருவன் வரும்வரை அறியாமைத் தளத்திலேயே அவன் இருக்கிறான். தங்களது புலன்களைத் திருப்திப்படுத்துவதிலேயே ஈடுபட்டு நேரத்தை வீணாக்கிக் கொண்டிருக்கும் ஆயிரக்கணக்கான, லட்சக்கணக்கான மக்களுள் யாரேனும் ஒருவன் அறிவுநிலையடைந்து வாழ்க்கையின் உயர்நெறிகளை உணரலாம். இத்தகையவன் ஞானி என்றழைக்கப்படுகிறான். பலன்நோக்குச் செயல்கள் ஜட வாழ்க்கையில் பந்தப்படுத்தி ஒரு உடலிலிருந்து மற்ற உடலுக்கு ஒருவனை மாற்றும் என்பதை அறிந்தவன், ஞானி, ‘ஷரீர-பந்த’ (உடலுடன் பந்தப்படுத்துதல்) என்று ஸ்ரீமத் - பாகவத்தில் கூறியுள்ளபடி புலனின்பத்தைப் பற்றிய எண்ணங்களை ஒருவன் கொள்வதால் ‘கர்மா’ அல்லது பலன் நோக்கு செயல்களிலேயே அவன் மனம் ஈடுபட்டிருக்கும். இது அவனை ஒரு உடலிலிருந்து வேறு உடலுக்கு மாறிக் கொண்டேயிருக்கச் செய்யும்.

இவ்வாறு ஒரு ஞானி கர்மியை விட மேலானவன். ஏனெனில் புலனின்பத்திற்காக குருட்டுச் செயல்களில் ஈடுபடுவதிலிருந்தாவது அவன் விலகியிருக்கிறான். முழுமுதற் கடவுளின் தீர்ப்பும் இது தான். எனினும் கர்மிகளது அறியாமையிலிருந்து ஒரு ஞானி விடுபட்டாலும் பக்தித் தொண்டு நிலையை அடையும் வரை அறியாமையில் இருப்பதாகவே அந்த ஞானியைக் கருத வேண்டும். ஒருவனை ஞானியாகவும் அறிவிற் சிறந்தவனாகவும் ஏற்றுக் கொண்ட போதிலும் முழுமுதற் கடவுளின் பாதகமலங்களின் நேரடி சேவையையும், பக்தித் தொண்டையும் பற்றி அறியாததால் அவனது அறிவு மாசுபட்டதே.

பக்தித் தொண்டை ஒரு ஞானி ஏற்று அதன்படி செயல்படும் போது சாதாரண ஞானியை விட வெகு சீக்கிரத்தில் உயர்ந்தவனாகிறான். இத்தகைய உயர்ந்த மனிதன் ‘ஞான-விமுக்த பக்தி-பரம’ என்றழைக்கப்படுகிறான். ஒரு ஞானி பக்தித் தொண்டை எவ்வாறு ஏற்கிறான் என்பதைக் கிருஷ்ணர் விளக்குகிறார்.

பஹுனாம் ஜன்மனாம் அந்தே
ஞானவான் மாம் ப்ரபத்யதே
வாஸுதேவ: ஸர்வம் இதி 
ஸ மஹாத்மா ஸுதுர்லப:

“பற்பல பிறப்பு, இறப்புகளுக்குப் பிறகு உண்மையில் அறிவுவாய்ந்த ஒருவன் எல்லா காரணங்களுக்கும், எல்லாவற்றிற்கும் காரணமாக என்னை அறிந்து என்னிடம் சரணடைகின்றான், அத்தகு பெரியோன் மிக அரிதானவன்”. 

உண்மையில் கிருஷ்ணருடைய பாதகமலங்களில் சரணடைபவன் மிகவும் அறிவுடையவனாவான். எனினும் இத்தகைய மகாத்மாவைக் காண்பது மிக மிக அரிது. மிகவுயர்ந்த பக்தர்களாகிய நாரதர், சனக, மற்றும் சனாதனரின் அடிகளைப் பின்பற்றி, கட்டுப்பாட்டு விதிகளின் கீழ் ஒருவன் பக்தித் தொண்டை ஏற்று நடந்தால் ‘இயற்கையான இறையன்பு’ நிலையை அடைவான். பகவானின் மேல் அன்பை வளர்த்துக் கொண்ட பக்தர்கள் நிச்சயமாக ஒரு மேலான நிலையில் உள்ளவர்களாவர்.

பக்தர்கள் அனைவருள்ளும், கோபியர்களே மேலானவர்கள் என்று கருதப்படுகின்றனர். ஏனெனில் அவர்கள் கிருஷ்ணரை திருப்திப்படுத்துவதைத் தவிர வேறொன்றையும் அறியாதவர்கள். கிருஷ்ணரிடமிருந்து எதையும் எதிர்பாராதவர்கள். உண்மையில் அவர்ளிடமிருந்து பிரிந்து அவர்களைப் பெருந்துயரில் கிருஷ்ணர் ஆழ்த்துவார். எனினும் அவர்களால் கிருஷ்ணரை மறக்க இயலாது. கிருஷ்ணர் மதுராவிற்குச் செல்ல விருந்தாவனத்தை விட்டுச் சென்ற போது கோபியர்கள் மிக்க துயர்கொண்டு அவர்களது மீதி வாழ்வை கழித்தனர். ஒரு விதத்தில் அவர்கள் கிருஷ்ணரிடமிருந்து பிரியவேயில்லை என்றும் பொருள் கொள்ளலாம். கிருஷ்ணருடன் பழகுவதற்கும் அவரைப்பற்றி நினைப்பதிற்குமிடையே எவ்வித வித்தியாசமும் இல்லை. கிருஷ்ணருக்கு நேரடியாகவே சேவை புரிவதை விட ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவைப் போல ‘விப்ரலம்ப-சேவா’, - பிரிவிலும் கிருஷ்ணரையே நினைப்பது உயர்ந்ததாகும். இவ்வாறு, கிருஷ்ணருக்கு கலப்படமற்ற தூய அன்பை வளர்த்துக் கொண்ட பக்தர்களுள் கோபியர்களே மிகவும் மேலானவர்கள். இத்தகைய மேலான கோபியர்களுள் ஸ்ரீமதி ராதாராணியே எல்லோரையும் விட உயர்ந்தவள். அவளது பக்தித் தொண்டை யாராலும் மிஞ்ச இயலாது. ஸ்ரீமதி ராதாராணியின் மனோபாவத்தை கிருஷ்ணராலேயே புரிந்து கொள்ள முடியாததால், அவர் ஸ்ரீமத் ராதாராணியின் நிலையை ஏற்று, ஸ்ரீமதி ராதாராணியின் திவ்ய உணர்ச்சிகளைப் புரிந்து கொள்ள ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவாக அவதரித்தார்.

இவ்வகையில், ஸ்ரீல ரூப கோஸ்வாமி, ஸ்ரீமதி ராதாராணியே கிருஷ்ண பக்தர்களுள் மிகவும் உயர்ந்தவளென்றும், ராதாராணியின் ஸ்ரீ ராதா-குண்டம் (குளம்) எல்லாவற்றிலும் இடங்களுக்கும் மேலான இடம் என்றும் தெரிவிக்கிறார். சைதன்ய சரிதாம்ருதத்தில் மேற்கோள் காட்டப்பட்டிருக்கும் படி லகு-பாகவதாம்ருத்தில் (உத்தர காண்டம் - 45) இது உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

யதா ராதா ப்ரியா விஷ்ணோஸ்
தஸ்யா: குண்டம் ப்ரியம் ததா
ஸர்வ-கோபீஷு சைவைகா
விஷ்ணோர் அத்யந்த-வல்லபா

“கிருஷ்ணருக்கு (விஷ்ணு) ஸ்ரீமதி ராதாராணி மிகவும் பிரியமாக இருப்பதைப் போல், ராதாராணி நீராடும் இடமாகிய ராதா-குண்டம் கிருஷ்ணருக்கு மிகவும் பிரியமானதாகும். கோபியர்கள் அனைவருள்ளும் ஸ்ரீமதி ராதாராணியே பகவானுக்கு மிகவும் பிரியமான கோபியாக விளங்குகிறாள்”.

எனவே கிருஷ்ண பக்தியில் ஆர்வமுள்ள ஒவ்வொருவரும் இறுதியாக ராதா குண்டத்தின் அடைக்கலத்தில் தனது வாழ்வு முழுவதும் பக்தித் தொண்டு புரிய வேண்டும். உபதேசாம்ருதத்தின் இந்த பதத்தில் ஸ்ரீல ரூப கோஸ்வாமியின் முடிவு இதுதான்.