முதன்மை கீற்றுகள்

உபதேசாமிருதம்

பதம் 1 பேச்சின் தூண்டுதல், மனதின் தேவைகள், கோபத்தின் செயல்கள் மற்றும் நாக்கு, வயிறு, பாலுறுப்புகள் ஆகியவற்றின் தூண்டுதல்களை பொறுத்துக் கொள்ளக்கூடிய நிதான புத்தியுள்ள ஒருவர் உலக முழுவதிலும் சீடர்களை ஏற்கும் தகுதி வாய்ந்தவராவார்.
பதம் 2 ஒருவன் பின்வரும் ஆறு செயல்களில் அளவுக்கதிகமாக சிக்கிக் கொள்ளும் போது அவனது பக்தித் தொண்டு வீணாகி விடுகிறது: (1) தேவைக்கு அதிகமாக உண்ணுவது அல்லது தேவைக்கதிகமாக செல்வம் திரட்டுவது; (2) கிடைத்தற்கரிய பௌதிக பொருட்களை அடைய பெரு முயற்சி செய்வது; (3) பௌதிக விஷயங்களை பேசுவது; (4) சமய விதிகளை ஆன்மீக முன்னேற்றத்திற்காக அல்லாமல் ஒப்புக்கு பின்பற்றுவது. அல்லது சாஸ்திர விதிகளை அலட்சியம் செய்து, சுதந்திரமாக செயற்படுவது. (5) கிருஷ்ண உணர்வில் ஆர்வம் இல்லாத பௌதிக எண்ணம் கொண்டவர்களோடு சகவாசம் கொள்வது, (6) பௌதிக சாதனைகளின் மேல் பேராசை கொள்வது.
பதம் 3 தூய பக்தித் தொண்டை நிறைவேற்றுவதற்கு அனு கூலமாக ஆறு கொள்கைகள் உள்ளன: (1) உற்சாகம் கொள்வது, (2) தன்னம்பிக்கையுடன் முயலுதல், (3) பொறுமையுடன் இருத்தல், (4) (ஸ்ரவணம் கீர்த்தனம் விஷ்ணோ:ஸ்மரணம் - கிருஷ்ணரைப் பற்றி செவியுறுதல், பாடுதல் மற்றும் நினைவிற் கொள்ளுதல் முதலிய) கட்டுப்பாட்டுக் கொள்கைகளுக்கு ஏற்ப செயற்படுதல், (5) பக்தரல்லாதவர்களின் சகவாசத்தைக் கைவிடுதல், (6) முந்தைய ஆசார்யர்களின் அடிச்சுவடுகளைப் பின்பற்றுதல். இந்த ஆறு கொள்கைகளும் தூய பக்தித் தொண்டின் முழு வெற்றியை நிச்சயமாக உறுதி செய்கின்றன.
பதம் 4 வெகுமதிகளை தானமாகக் கொடுப்பது, தானமளிக்கப்படும் வெகுமதிகளை ஏற்பது, மனதை நம்பிக்கையுடன் ஒருவர் வெளிப்படுத்துதல், நம்பிக்கையுடன் விசாரித்தல், பிரசாதம் ஏற்றல் மற்றும் பிரசாதம் அளித்தல் ஆகியவை பக்தர்களுக்கு இடையில் பகிர்ந்து கொள்ளப்படும் அன்பிற்கான ஆறு இலட்சணங்களாகும்.
பதம் 5 பகவான் கிருஷ்ணரின் புனித நாமங்களை உச்சரிக்கும் பக்தரை ஒருவன் மனதால் கௌரவிக்க வேண்டும்; தீட்சை பெற்று பகவானின் விக்ரஹ வழிபாட்ல் ஈடுபட்டிருக்கும் பக்தருக்கு ஒருவன் பணிவாக வணக்கங்களைச் சமர்பிக்க வேண்டும், மேலும் வழுவாத பக்தித் தொண்டில் உயர்ந்த நிலையில் இருப்பவரும்; மற்றவர்களிடம் குற்றம் கண்டுபிடித்துக் குறைகள் கூறும் எண்ணம் அறவே இல்லாதவருமான தூய பக்தருடன் பழகி அவருக்கு உண்மையாக சேவை செய்ய வேண்டும்.
பதம் 6 தன்னுடைய உண்மையான கிருஷ்ண உணர்வு நிலையில் வைக்கப்பட்டதால் தூய பக்தன் உடலுடன் தன்னை சம்பந்தப்படுத்திக் கொள்வதில்லை. இத்தகைய பக்தரை ஜட வியூகத்திலிருந்து பார்க்கக் கூடாது. உண்மையில் தாழ்ந்த குடும்பத்தைச் சேர்ந்த உடலையோ, மோசமான நிறங்கொண்ட உடலையோ, அங்கஹீன உடலையோ, அல்லது நோய்வாய்ப்பட்ட, உறுதியற்ற உடலையோ ஒரு பக்தர் கொண்டிருந்தாலும் அவற்றைக் கண்காணியாது விட வேண்டும். சாதாரணப் பார்வையில் குறைகளிருந்தாலும் ஒரு தூய பக்தரின் உடல் என்றும் களங்கப்படுவதில்லை. அது, நுரை, சேறு நிறைந்த மழைக்கால கங்கை நீரைப் போன்றதே. கங்கை நீர் என்றும் மாசுவடுவதில்லை. ஆன்மீக உணர்வில் முன்னேறியவர்கள் கங்கை நீரின் நிலையைப் பார்க்காமல் அதில் நீராடுவர்.
பதம் 7 கிருஷ்ணரின் புனித நாமம், குணம், லீலைகள் மற்றும் செயல்கள் கற்கண்டைப் போல திவ்யமான சுவை கொண்டவை. அறியாமையாகிய காமாலை நோயினால் பாதிக்கப்பட்டவனின் நாக்கினால் இனிப்பை சுவைக்க இயலாது எனினும் சுவையான இத்திருநாமங்களைத் தினமும் கவனமாக உச்சரிப்பதனால் அவனது நாவில் இயற்கையான சுவை உண்டாகி அந்நோயை படிப்படியாக வேரோடு சாய்த்து விடும்.
பதம் 8 அனைத்து உபதேசங்களின் சாரம் யாதெனில் ஒருவன் தனது முழு நேரத்தையும் அதாவது இருபத்து நான்கு மணிநேரத்தையும் பகவானின் புனித நாமங்களைச் சொல்வதிலும், பகவானது திருநாமம், திவ்யரூபம், குணங்கள் மற்றும் நித்ய லீலைகள் ஆகியவற்றையே நினைப்பதிலும் பயன்படுத்தவேண்டும். இவ்வாறு செய்வதினால் படிப்படியாக நாக்கையும் மனதையும் கட்டுப்படுத்தலாம். இவ்வழியில் ஒருவன் வ்ரஜா (கோலோக விருந்தாவன தாம) வில் வசித்து பக்தர்களின் வழிநடத்துதலில் கிருஷ்ணருக்கு சேவை செய்ய வேண்டும். பக்தித் தொண்டில் மிக்க பற்று கொண்ட – பகவானின் மிக்க அன்புள்ள பக்தர்களின் அடிகளைப் பின்பற்ற வேண்டும்.
பதம் 9 பகவான் தோன்றிய காரணத்தினால் புனிதத்தலமான மதுரா, திவ்ய லோகமான வைகுண்டத்தைவிட தெய்வீகமாக உயர்ந்தது. கிருஷ்ணரின் ராச-லீலையினால் திவ்ய வனமான விருந்தாவனம் மதுராபுரியைவிட உயர்ந்தது. ஸ்ரீ கிருஷ்ணரின் திருக்கையினால் உயர்த்தப்பட்டதும் அவரது அன்பு லீலைகளின் தலமாக விளங்கியதுமான கோவர்தனகிரியானது விருந்தாவன வனத்தை விட உயர்ந்தது. எல்லாவற்றிற்கும் மேலாக, கோகுலத்தின் பகவானான ஸ்ரீ கிருஷ்ணரின் அமுதப் பிரேமையினால் மிதமிஞ்சியிருக்கும் மிகமிக உயர்ந்த ஸ்ரீ-ராதா-குண்டமானது மிகமிக மேலானது. கோவர்தன கிரியின் அடிவாரத்தில் உள்ள திவ்யமான ஸ்ரீ ராதா குண்டத்திற்கு சேவை புரிய மனமில்லாத அறிவுள்ள மனிதர் எவரேனும் உண்டோ?
பதம் 10 பலன் நோக்கிக் செயல்படுபவர்களுள், வாழ்க்கையின் உயர் நெறிகளைப் பற்றிய அறிவில் உயர்ந்தோர் முழுமுதற் கடவுளாகிய ஹரியினால் கருணை காட்டப்படுவார் என சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ளது. அறிவில் உயர்ந்தோராகிய (ஞானிகள்) இத்தகைய பலருள் தனது நல்லறிவால் அநேகமாக முக்தியடைந்த ஒருவர் பக்திக் தொண்டு புரியலாம். அவர் மற்றவர்களை விட மேலானவராவார். எனினும் கிருஷ்ணரின் மேல் தூய அன்பு கொண்டோர் அவரை விட உயர்ந்தோராவர். திவ்ய இடைச்சிறுவனான ஸ்ரீ கிருஷ்ணரையே சார்ந்திருப்பதால் கோபியர்கள் எல்லா உயர்ந்த பக்தர்களைவிட மேலானவர்கள் ஆவர். கோபியர்களுள் ஸ்ரீமதி ராதாராணி கிருஷ்ணருக்கு மிகவும் பிரியமானவராவார். ஸ்ரீமதி ராதாராணியைப் போலவே ராதாராணியின் ராதா-குண்டமும் கிருஷ்ணருக்கு மிகவும் பிரியமானதாகும். அஷ்டகாலீய – லீலை அல்லது நித்யமான எட்டுவித தினசரி லீலைகளைப் புரியும் தெய்வீகத்தம்பதிகளான ஸ்ரீ-ஸ்ரீராதா-கோவிந்தனுக்கு பேரானந்த பக்தி உணர்ச்சிகளுடன் (அப்ராக்ருத பாவா) கூடிய, ஆன்மீக உடலுடன் அன்புத் தொண்டு புரியாமல், ராதா-குண்டத்தில் வசிக்காமல் இருப்பவர் எவரேனும் உண்டோ? உண்மையில் ராதா-குண்டத்தின் கரைகளிலிருந்து பக்தித் தொண்டு புரிபவர்கள்தான் இந்த அகிலத்திலேயே அதிர்ஷ்டம் செய்தவர்கள்.
பதம் 11 ஸ்ரீமதி ராதாராணியின் தெய்வீக ஏரி உயர்ந்த முனிவர்களால், கிருஷ்ணருக்கு மிகவும் பிரியமானதாக விளக்கப்படுகிறது. சந்தேகமின்றி, மிக உயர்ந்த பக்தர்களால் கூட சில சமயம் தான் ராதா குண்டத்தை அடைய முடியும். எனவே சாதாரண பக்தர்களுக்கு அது மேலும் கடினமாகும். ஒருவன் இந்த புனித தீர்த்தத்தில் ஒரு முறை நீராடினால் கூட கிருஷ்ணருக்கான தூய அன்பை அது உண்டாக்கும்.