Bg 9.2

ராஜ-வித்யா ராஜ-குஹ்யம்
பவித்ரம் இதம் உத்தமம்
ப்ரத்யக்ஷாவகமம் தர்ம்யம்
ஸு ஸுகம் கர்தும் அவ்யயம்
Synonyms: 
ராஜ-வித்யா — கல்வியின் அரசன்; ராஜ-குஹ்யம் — இரகசியமான ஞானத்தின் அசரன்; பவித்ரம் — மிகத் தூய்மையானது; இதம் — இந்த; உத்தமம் — உத்தமமானது; ப்ரத்யக்ஷ — நேரடி அனுபவத்தால்; அவகமம் — புரிந்து கொள்ளக்கூடியது; தர்ம்யம் — அறக் கொள்கை; ஸு-ஸுகம் — மிகுந்த இன்பத்துடன்; கர்தும் — செயலாற்றுவது; அவ்யயம் — என்றும் அழிவற்றது.
Translation: 
இந்த அறிவு, கல்வியின் அரசனும், எல்லா இரகசியங்களிலும் மிக இரகசியமானதும், மிகத் தூய்மையானதுமாகும். தன்னுணர்வின் அனுபவத்தை நேரடியாக அளிப்பதால் இதுவே தர்மத்தின் பக்குவ நிலையாகும். இஃது அழிவற்றதும், பேரின்பத்துடன் செயலாற்றுப்படுவதும் ஆகும்.
Purport: 

பகவத் கீதையின் இந்த அத்தியாயம், இதற்கு முன்னர் விளக்கப்பட்ட கொள்கைகளுக்கும் தத்துவங்களுக்கும் சாரமாக திகழ்வதால், இஃது "அறிவின் அரசன்" என்று அழைக்கப்படுகின்றது. இந்தியாவில் ஏழு முக்கியமான தத்தவஞானிகள் உள்ளனர்: கௌதமர், கணாதர், கபிலர், யக்ஞவல்கியர், சாண்டில்யர், வைஷ்வானரர், இறுதியாக வேதாந்த சூத்திரத்தை இயற்றிய வியாசதேவர். எனவே, தத்துவத்தின் (திவ்ய ஞானத்தின்) துறையில் அறிவிற்குப் பஞ்சமே இல்லை. வேதங்களையும் பல்வேறு தத்துவங்களையும் கற்பதால் பெறப்படும் ஞானத்தின் சாரமாக விளங்கும் இந்த ஒன்பதாம் அத்தியாயத்தினை "அறிவின் அரசன்" என்று பகவான் இங்கே குறிப்பிடுகிறார். இதுவே இரகசியங்களில் உத்தமமானது. ஏனெனில், இரகசியமான அறிவு (திவ்யமான அறிவு) என்பது உடலுக்கும் ஆத்மாவிற்கும் உள்ள வேறுபாட்டை புரிந்துகொள்வதை உள்ளடக்கியது. அத்தகு இரகசிய அறிவு பக்தித் தொண்டினை எட்டும்போது, அஃது "அறிவின் அரசனாக" கருதப்படுகிறது.

பொதுவாக, இந்த இரகசிய அறிவு மக்களுக்கு கற்பிக்கப்படுவதில்லை. அவர்கள் வெளிப்புற அறிவை மட்டுமே பெறுகின்றனர். கல்வி என்பதைப் பொறுத்தவரை, பொதுவாக, அரசியல், சமூகவியல், பௌதிகம், இரசாயனம், கணிதம், வானவியல், பொறியியல் போன்ற பற்பல துறைகளில் மக்கள் ஆழ்ந்துள்ளனர். உலகெங்கிலும் பற்பல கல்வித்துறைகளும் மிகப்பெரிய பல்கலைக்கழகங்களும் உள்ளன. ஆனால், துரதிர்ஷ்டவசமாக ஆத்ம விஞ்ஞானத்தைக் கற்றுக் கொடுப்பதற்கு, கல்வி நிறுவனமோ பல்கலைக் கழகமோ இல்லை. இருப்பினும், ஆத்மாவே உடலின் மிக முக்கியப் பகுதி; ஆத்மா இல்லாவிடில் உடலுக்கு எவ்வித மதிப்பு இல்லை. ஆனால், முக்கியத்துவம் வாய்ந்த ஆத்மாவினை கவனிக்காமல், மக்கள் தங்களது உடல் சார்ந்த வாழ்க்கைத் தேவைகளை பெரிதும் வலியுறுத்துகின்றனர்.

பகவத் கீதை, இரண்டாம் அத்தியாயத்திலிருந்தே ஆத்மாவின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகின்றது. அதன் ஆரம்பத்திலேயே, உடல் அழியக்கூடியதென்றும் ஆத்மா அழிவற்றதென்றும் பகவான் கூறுகின்றார் (அந்தவந்த இமே தேஹா நித்யஸ்யோக்தா: ஷ ரீரின:). ஆத்மா உடலிலிருந்து வேறுப்பட்டது; அது மாற்றமடையாத, அழிக்கவியலாத, நித்தியமான இயற்கையை உடையது என்பதை அறிந்துகொள்வது ஞானத்தின் இரகசியமான பகுதியாகும். இருப்பினும் ஆத்மாவின் செயல்களைப் பற்றிய எந்தவொரு விவரமும் இதில் இல்லை. சில சமயங்களில், "ஆத்மா உடலிலிருந்து வேறுபட்டது; உடல் அழியும் போது, அல்லது உடலிருந்து முக்தியடையும்போது, ஆத்மா செயல்கள் ஏதுமின்றி அருவமாகிவிடுகிறது" என்று மக்கள் கருதகின்றனர். ஆனால் அஃது உண்மையல்ல. உடலினுள் எப்போதும் செயல்பட்டுக் கொண்டுள்ள ஆத்மா முக்திபெற்றபின் எவ்வாறு செயலின்றி இருக்க முடியும்? ஆத்மா எப்போதும், செயல்படக்கூடியதாகும். அது நித்தியமானது என்பதால் அதன் செயல்படும் தன்மையும் நித்தியமானதாகவே இருக்கும். ஆன்மீக உலகில் ஆத்மாவினால் செய்யப்படும் செயல்கள், ஆன்மீக ஞானத்தின் மிக இரகசியமான பகுதியாகும். எனவே, ஆத்மாவின் அத்தகு செயல்கள், எல்லா ஞானத்திலும் மிக இரகசியமானதாக, அறிவின் அரசனாக இங்கு குறிப்பிடப்படுகின்றது.

வேத இலக்கியங்களில் விளக்கப்பட்டுள்ளபடி, இந்த ஞானமே எல்லா செயல்களின் மிகத்தூய்மையான உருவமாகும். மனிதனின் பாவச் செயல்கள், பாவங்களுக்கு மேல் பாவங்கள் செய்தவதன் விளைவுகளே என்று பத்ம புராணத்தில் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. பலன்நோக்குச் செயல்களில் ஈடுபட்டுள்ளவர்கள், பாவ விளைவுகளின் பல்வேறு நிலைகளாலும் ரூபங்களாலும் பந்தப்பட்டுள்ளனர். உதாரணமாக ஒரு குறிப்பிட்ட மரத்தின் விதையை விதைத்தால், அந்த மரம் உடனே வளர்வதில்லை; அதற்குச் சிறிது காலம் ஆகின்றது. முதலில் அது துளிர்விடும், சிறிய செடியாகும், பிறகு மரமாக வளந்ந்து, பூக்களையும் பழங்களையும் கொடுக்கும். அப்போது, அந்த மரத்தின் விதையை விதைத்தவர்கள், அதன் பூக்களையும் பழத்தையும் அனுபவிக்கின்றனர். அதுபோல, மனிதன் பாவச் செயலைச் செய்யும்போது, அது விதையைப் போன்று வளர்வதற்கு நேரமாகின்றது. அதில் பற்பல நிலைகள் உள்ளன. மனிதன் தனது பாவச் செயல்களை ஏற்கனவே நிறுத்தி யிருக்கலாம். ஆனால் முந்தைய பாவச் செயலின் பழங்கள் (விளைவுகள்) இன்னும் அனுபவிக்கப்பட்ட வேண்டியவை. சில பாவங்கள் இன்னும் விதை வடிவிலேயே உள்ளன, மற்றவை வளர்ந்து பழங்களைக் கொடுக்கின்றன, அப்பழங்களை நாம் துன்பமாகவும் வலியாகவும் அனுபவிக்கிறோம்.

ஏழாம் அத்தியாயத்தின் இருத்தெட்டாவது பதத்தில் விளக்கப்பட்டுள்ளபடி, எல்லா பாவச் செயல்களின் விளைவுகளையும் முழுமையாக ஒழித்து, புண்ணிய செயல்களில் முழுமையாக ஈடுபட்டு, இந்த ஜடவுலலகின் இருமைகளிலிருந்து விடுபட்டவன், புருஷோத்தமரான முழுமுதற் கடவுள் ஸ்ரீ கிருஷ்ணரின் பக்தித் தொண்டில் ஈடுபடுகிறான். வேறு விதமாக் கூறினால், பரம புருஷானின் பக்தித் தொண்டில் உண்மையாக ஈடுபட்டுள்ளவர்கள், ஏற்கனவே எல்லா விளைவிகளிலிருந்தும் விடுதலை பெற்றவர்கள். இக்கருத்து பத்ம புராணத்தில் உறுதி செய்யப்பட்டுள்ளது:

அப்ராரப் த-பலம் பாபம்
கூடம் பீஜம் பலோன் முகம்
க்ரமேணைவ ப்ரலீயேத
விஷ்ணு-பக்தி ராத்மனாம்

பரம புருஷ பகவானின் பக்தி; தொண்டில் ஈடுபட்டவர்களுக்கு, பழுத்தவை, காத்திருப்பவை, விதையாக உள்ளவை என எல்லா பாவ விளைவுகளும் படிப்படியாக அழிந்துவிடுகின்றன. எனவே, பக்தித் தொண்டின் தூய்மைப்படுத்தும் சக்தி மிகவும் வலிமை வாய்ந்தது, இது பவித்ரம்-உத்தமம் மிகவும் தூய்மையானது என்று அழைக்கப்படுகின்றது. உத்தம என்றால் மிக உயர்ந்தது என்று பொருள். தமஸ் என்றால் இருள் அல்லது ஜடவுலகத்தைக் குறிக்கும், உத்தம என்றால் ஜடச் செயல்களைவிட உயர்ந்தது என்று பொருள். பக்தர்கள் சாதராண நபர்களைப் போன்று செல்படுவதாக சிலசமயங்களில் தோன்றினாலும், பக்தியின் செயல்களை உலகாயுத செயல்களுக்கு சமமாக ஒருபோகும் கருதக்கூடாது. பக்தித் தொண்டில் அனுபவம் உள்ளவன், அச்செயல்கள் பௌதிகமமானவை அல்ல என்பதை அறிவான். அவையாவும் ஜட இயற்கையின் குணங்களினால் களங்கடையாத, ஆன்மீகமயமான செயல்களாகும்.

பலன்களை நேரடியாக உணருமளவிற்கு, பக்தித் தொண்டின் செயல்கள் மிகவும் பக்குவமானவை என்று கூறப்பட்டுள்ளது. இதன் நேரடிப் பலனை உண்மையாகவே உணர முடியும், இதில் நமக்கு அனுபவமும் உள்ளது. கிருஷ்ணரின் திருநாமங்களை (ஹரே கிருஷ்ண, ஹரே கிருஷ்ண, கிருஷ்ண கிருஷ்ண, ஹரே ஹரே / ஹரே ராம, ஹரே ராம, ராம ராம, ஹரே ஹரே என்று) உச்சரிப்பவர் அபராதமின்றி உச்சரிக்கும்போது திவ்ய ஆனந்தத்தை உணர்கிறார், மேலும் வெகு விரைவில் எல்லாவித ஜட மாசுக்களிலிருந்தும் தூய்மையடைகிறார். இது நடைமுறையில் நாம் கண்ட உண்மை. மேலும், கேட்பதோடு மட்டுமின்றி பக்தித் தொண்டின் செய்தியைப் பரப்ப ஒருவன் முயற்சி செய்தால், அல்லது கிருஷ்ண உணர்வின் பொதுநலச் செயல்களுக்கு உதவுவதில் தன்னை ஈடுபடுத்தினால், அவன் படிப்படியாக ஆன்மீக முன்னேற்றத்தை உணர முடியும். ஆன்மீக வாழ்வின் இந்த முன்னேற்றம் எந்தவிதமான முந்தைய தகுதியையோ கல்வியையோ பொறுத்ததல்ல; இந்த வழிமுறையில் எளிமையாக ஈடுபடுவதன் மூலம் ஒருவன் தூய்மையடைகிறான், அந்த அளவிற்கு இந்த வழிமுறை மிகவும் தூய்மையானதாகும்.

இதே கருத்து வேதாந்த சூத்திரத்தில் (3.2.26) பின்வரும் சொற்களால் விளக்கப்பட்டுள்ளது: ப்ரகாஷ ஷ் ச கர்மண்-யப் யாஸாத். "பக்தித் தொண்டின் செயல்களில் ஈடுபடுபவன் சந்தேகமின்றி சான்றோனாகுகிறான்-பக்தித் தொண்டு அத்தகு சக்தி வாய்ந்தது." நாரதரின் முந்தைய பிறவியிலிருந்து இதற்கான நடைமுறை உதாரணத்தை நாம் காண முடியும், அப்பிறவியில் அவர் ஒரு வேலைக்காரியின் மகனாக இருந்தார்; கல்வி கற்றவரும் இல்லை, பெரும் குடும்பத்தில் பிறந்தவரும் இல்லை. ஆனால் சிறந்த பக்தர்களின் சேவையில் அவரது அன்னை ஈடுபட்டிருக்கையில், நாரதரும் அதில் ஈடுபடுவார். சில சமயங்களில் அன்னை இல்லாத நேரங்களில் அவரே இந்த சிறந்த பக்தர்களுக்கு சேவை செய்வார். இதை நாரதரே கூறுகின்றார்,

உச்சி ஷ்ட-லேபான் அனுமோதி தோ த் விஜை:
ஸக்ருத் ஸ்ம புஞ்ஜே தத்- அபாஸ்த-கில்பி ஷ:
ஏவம் ப்ரவ்ருத்தஸ்ய விஷு த்த-சேதஸஸ்
தத்-தர்ம ஏவாத்ம-ருசி ப்ரஜாயதே

ஸ்ரீமத் பாகவதத்திலுள்ள (1.5.25) இப்பதத்தில் நாரதர் தனது முந்தைய பிறவியைப் பற்றி தன்னுடைய சீடரான வியாசதேவரிடம் விளக்குகிறார். அந்த தூய பக்தர்கள் நான்கு மாதம் தங்கியிருந்தபோது, சிறுவனான நாரதர், அவர்களுக்கு சேவை செய்து அவர்களுடன் நெருங்கிய உறவை வளர்த்தார். சில நேரங்களில் அந்த சாதுக்கள் உணவின் மீதியை தட்டிலேயே விட்டுச் செல்வர், அந்த தட்டுகளை கழுவும் சிறுவன், உணவின் மீதியை சுவைக்க விரும்பினான். அதற்காக அவன் அச்சிறந்த பக்தர்களின் அனுமதியை கேட்க, அவர்களும் உணவின் மீதியை நாரதரிடம் கொடுத்தனர், இதன் விளைவாக எல்லாப் பாவ விளைவுகளிலிருந்தும் விடுபட்டான். அவ்வாறு தொடர்ந்து உண்டு வந்தபோது, சிறுவனும் அந்த சாதுக்களைப் போன்ற தூய்மையான இதயத்தைப் படிப்படியாகப் பெற்றான். ஸ்ரவணம் மற்றும் கீர்த்தனத்தின் மூலம் இடையறாத பக்தித் தொண்டின் சுவையை அந்த பெரும் பக்தர்கள் அனுபவித்துக் கொண்டிருந்தனர், நாரதரும் அதே சுவையை படிப்படியாக வளர்த்துக் கொண்டார். நாரதர் மேலும் கூறுகிறார்,

தத்ரான்வஹம் க்ருஷ்ண-கதா ப்ரகா ய தாம்
அனுக் ரஹேணாஷ் ருணவம் மனோஹரா:
தா: ஷ்ரத்தயா மே (அ) னுபதம் விஷ் ருண்வத:
ப்ரியஷ் ரவஸ்-யங்க மமாபவத் ருசி:

சாதுக்களுடன் உறவு கொண்டதால், பகவானின் புகழைக் கேட்பதற்கும் பாடுவதற்கும் நாரதர் ருசியை பெற்றார், மேலும் பக்தித் தொண்டிற்கான பேராவலையும் வளர்த்துக் கொண்டார். எனவே வேதாந்த சூத்திரத்தில் விளக்கப்பட்டபடி, ப்ரகாஷஷ் ச கர்மண்-யப்யாஸாத்—ஒருவன் பக்தித் தொண்டின் செயல்களில் ஈடுபட்டிருந்தால், அவனுக்கு அனைத்தும் தாமாகவே தெளிவாகி, அவற்றைப் புரிந்துகொள்கிறான். இதுவே, ப்ரத்யக்ஷ, நேரடியான அனுபவம் என்று அழைக்கப்படுகிறது.

தர்ம்யம் என்றால் "தர்மத்தின் பாதை" என்று பொருள். நாரதர் உண்மையில் ஒரு வேலைக்காரியின் மகனாக இருந்தார். பள்ளி செல்லும் வாய்ப்பு அவருக்கு இல்லை. அவர் வெறுமனே தனது தாய்க்கு உதவி செய்து வந்தார், அதிர்ஷ்டவசமாக அரவது தாய் சில பக்தர்களுக்கு சேவை செய்ய நேர்ந்தது. அந்த வாய்ப்பைப் பெற்ற மகன் நாரதரும் பக்தர்களின் உறவால், தர்மத்தின் மிகவுயர்ந்த குறிக்கோளை அடைந்தார். ஸ்ரீமத் பாகவதத்தில் குறிப்பிட்டுள்ளபடி, பக்தித் தொண்டே தர்மத்தின் மிகவுயர்ந்த குறிக்கோளாகும் (ஸ வை பும்ஸாம் பரோ தர்மோ யதோ பக்திர் அதோக்க்ஷஜே). பக்தித் தொண்டினை அடைவதே தர்மத்தின் மிகவுயர்ந்த பக்குவநிலை என்பதை சாதாரண தர்மத்தை பின்பற்றுவோர் பொதுவாக அறிவதில்லை. எட்டாம் அதத்தியாயத்தின் கடைசி பதத்தில் நாம் விவாதித்தபடி (வேதேஷு யக்ஞேஷு தப:ஷு சைவ), தன்னுணர்விற்கு வேத ஞானம் அவசியமாகும். ஆனால் இங்கே, குருகுலத்திற்கு ஒருபோதும் செல்லாதபோதிலும், வேதக்கொள்கைகளில் தேர்ச்சி பெறாதபோதிலும், நாரதர் வேதக் கல்வியின் மிகவுயர்ந்த பலன்களை அடைந்தார். தர்மத்தின் கொள்கைகளை முறையாகச் செயலாற்றாதபோதிலும், மிகவுயர்ந்த பக்குவநிலைக்கு ஒருவனை உயர்த்துமளவிற்கு, இந்த வழிமுறை மிகவும் சக்தி வாய்ந்ததாகும். இஃது எவ்வாறு சாத்தியமாகும்? இதுவும் வேத இலக்கியங்களில் உறுதி செய்யப்பட்டுள்ளது: ஆசார்யவான் புருஷோ வேத. கல்வியறிவு இல்லாதவனாக இருந்தாலும், வேதங்களை ஒருபோதும் படிக்காதவனாக இருந்தாலும், பெரும் ஆச்சாரியர்களுடன் தொடர்பு கொள்பவன், தன்னை உணர்வதற்குத் தேவையான எல்லா ஞானத்தையும் அடைந்துவிடுகிறான்.

பக்தித் தொண்டின் வழிமுறை மிகவும் மகிழ்ச்சிகரமானதாகும் (ஸுஸுகம்). ஏன்? பக்தித் தொண்டு, ஷ்ரவணம் கீர்தனம் விஷ்ணோ: என்பதை உள்ளடக்கியதால், பகவானின் பெருமைகளைப் பற்றிய கீர்த்தனங்களையும், திவ்ய ஞானத்தைப் பற்றி அங்கீகரிக்கப்பட்ட ஆச்சாரியர்களால் வழங்கப்படும் தத்துவ சொற்பொழிவுகளையும் ஒருவன் எளிமையாகக் கேட்கலாம். அமர்ந்த நிலையிலேயே அவன் கற்றுக் கொள்ளலாம்; பின்னர் பகவானுக்குப் படைக்கப்பட்ட அருமையான அறுசுவை உணவுகளை உண்ணலாம். பக்தித்தொண்டு ஒவ்வொரு நிலையிலும் இன்பமயமானது. மிகவும் வறுமையான நிலையிலும் பக்தித் தொண்டினை செயலாற்ற முடியும். பகவான் கூறுகிறார், பத்ரம் புஷ்பம் பலம் தோயம்—பக்தன் எதைப் படைத்தாலும், அதனை ஏற்றுக்கொள்ள அவர் தயாராக உள்ளார், எந்தப் பொருள் என்பது பொருட்டல்ல. உலகின் எல்லா பகுதிகளிலும் கிடைக்கக்கூடிய இலை, பூ, சிறு பழம், அல்லது நீர் போன்றவற்றை சமுதாயத்தின் எந்த நிலையிலுள்ள நபரும் அர்ப்பணிக்க முடியும், அதனை அன்புடன் சமர்ப்பிக்கம்போது பகவான் அதனை ஏற்றுக்கொள்கிறார். சரித்திரத்தில் இதற்குப் பல சான்றுகள் உள்ளன. பகவானின் தாமரைத் திருவடிகளில் சமர்ப்பிக்கப்பட்ட துளசி இலைகளைச் சுவைத்ததால் ஸனத் குமாரரைப் போன்ற மாமுனிவர்கள் மிகச் சிறந்த பக்தர்களானர். எனவே, பக்தியின் வழிமுறை மிகவும் சிறந்ததாகும், இதனை மகிழ்ச்சியுடன் செயலாற்ற முடியும். பொருள்கள் படைக்கப்படும் போது, கடவுள் அதிலுள்ள அன்பை மட்டுமே ஏற்றுக்கொள்கிறார்.

பக்தித் தொண்டு நித்தியமானது என்று இங்கே கூறப்பட்டுள்ளது. இது மாயாவாத தத்துவஞானிகள் கூறுவது போன்றதல்ல. அவர்களும் சில சமயங்களில் பெயரளவிலான பக்தித் தொண்டினை ஏற்கின்றனர்; இருப்பினும், "முக்தி பெறும்வரை பக்தித் தொண்டினைத் தொடரலாம், ஆனால் இறுதியில் முக்தியடைந்தவுடன் நாமும் கடவுளுடன் ஒன்றாகி விடுவோம்" எனும் கருத்தைக் கொண்டுள்ளனர். இத்தகைய தற்காலிகமான சந்தர்பவாத பக்தித் தொண்டினை தூய பக்தித் தொண்டாக ஏற்றுக் கொள்ள முடியாது. உண்மையான பக்தித் தொண்டு முக்திக்குப் பின்னும் தொடர்கிறது. பக்தன், கடவுளின் இராஜ்ஜியத்திலுள்ள ஆன்மீக கிரகத்திற்குச் செல்லும்போது, அங்கும் பரம புருஷரின் தொண்டில் ஈடுபடுகிறான். அவன் பரம புருஷருடன் ஒன்றாகி விட முயற்சி செய்வதில்லை.

பகவத் கீதையில் காண இருப்பதைப் போல, உண்மையான பக்தித் தொண்டு முக்திக்குப் பிறகுதான் தொடங்குகின்றது. ஒருவன் முக்தி அடைந்த பிறகு, பிரம்மனில் நிலைபெற்றிருக்கும்போது (ப்ரஹ்ம–பூத), அவனது பக்தித் தொண்டு ஆரம்பமாகிறது (ஸம: ஸர்வேஷு பூதேஷு மத்-பக்திம் லபதே பராம்). கர்ம யோகம், ஞான யோகம், அஷ்டாங்க யோகம் போன்ற எந்த யோகப் பயிற்சியினாலும், யாரும் பரம புருஷ பகவானை அறிந்துகொள்ள முடியாது. அந்த யோக முறைகளின் மூலம் பக்தி யோகத்தை நோக்கிச் சற்று முன்னேறலாம், ஆனால் பக்தித் தொண்டின் நிலைக்கு வராமல், புருஷோத்தமரான முழுமுதற் கடவுளை எவரும் புரிந்துகொள்ள முடியாது. பக்தித் தொண்டின் வழிமுறையைப் பின்பற்றி, குறிப்பாக ஸ்ரீமத பாகவதம், பகவத் கீதை போன்றவற்றை தன்னையுணர்ந்த ஆத்மாக்களிடமிருந்து கேட்டு தூய்மையடையும் போது, அவனால் கிருஷ்ணரின் (கடவுளின்) விஞ்ஞானத்தை புரிந்து கொள்ள முடியும் என்று ஸ்ரீமத் பாகவதத்திலும் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏவம் ப்ரஸன்ன-மனஸோ பகவத்-பக்தி யோகத:. ஒருவனது இதயம் எப்போது எல்லா அபத்தங்களிலிருந்தும் தூய்மையடைகிறதோ, அப்போது கடவுள் என்றால் என்ன என்பதை அவன் புரிந்துகொள்ள முடியும். இவ்வாறாக, கிருஷ்ண உணர்வு எனப்படும் பக்தித் தொண்டு, எல்லாவித கல்விக்கும் எல்லாவித இரகசியமான அறிவிற்கும் அரசனாக விளங்குகின்றது. இதுவே தர்மத்தின் மிகத் தூய்மையான ரூபம், கஷ்டமின்றி மகிழ்ச்சியுடன் நிறைவேற்றப்படக்கூடியது. எனவே, அனைவரும் இதனை ஏற்றுக்கொள்ள வேண்டும்.