New version available here: vedabase.io

Bg 9.17

பிதாஹம்-அஸ்ய ஜகதோ
மாதா தாதா பிதாமஹ:
வேத்யம் பவித்ரம் ஓம்கார
ரிக் ஸாம யஜுர் ஏவ ச
Synonyms: 
பிதா — தந்தை; அஹம் — நான்; அஸ்ய — இதன்; ஜகத: — அகிலத்தின்; மாதா — தாய்; தாதா — காப்போன்; பிதாமஹ — தாத்தா; வேத்யம் — அறியப்பட வேண்டியது எதுவோ அது; பவித்ரம் — தூய்மைப்படுத்துவது; ஓம்-கார — ஓம் என்னும் சொல்; ரிக் — ரிக் வேதம்; ஸாம — ஸாம வேதம்; யஜு: — யஜுர் வேதம்; ஏவ — நிச்சயமாக; — மேலும்.
Translation: 
இந்த அகிலத்தின் தந்தையும் தாயும் காப்பவனும் பாட்டனாரும் நானே. அறியப்பட வேண்டிய பொருளும், தூய்மைப்படுத்தும் பொருளும், ‘ஓம்’ என்னும் மந்திரமும் நானே. ரிக், ஸாம, யஜுர் வேதங்களும் நானே.
Purport: 

அசையும், அசையாத பிரபஞ்சத் தோற்றம் முழுவதும் கிருஷ்ணருடைய சக்தியின் பல்வேறு செயல்களின் மூலம் படைக்கப்படுகின்றன. ஜடவுலகில் நாம் பல்வேறு உயிர்வாழிகளுடன் பல்வேறு உறவுகளை வளர்த்துக் கொள்கிறோம், உண்மையில் அந்த உயிர்வாழிகள் அனைவரும் கிருஷ்ணரின் நடுநிலை சக்தியே; ப்ரக்ருதியின் படைப்பில் அவர்களில் சிலர் தந்தையாகவும், தாயாகவும், பாட்டனாராகவும், படைப்பவராகவும் தோன்றுகின்றனர், ஆனால் உண்மையில் அவர்கள் எல்லாரும் கிருஷ்ணரின் அம்சங்களே. இதன் அடிப்படையில், நமக்குத் தாயாகவும் தந்தையாகவும் தோன்றும் இந்த உயிர்வாழிகள் கிருஷ்ணரே. இப்பதத்தில் தாதா எனும் சொல் படைப்பவனைக் குறிக்கின்றது. நமது தாய் தந்தையர் மட்டும் கிருஷ்ணருடைய அம்சங்கள் அல்ல, படைப்பாளி, பாட்டனார், பாட்டி என அனைரும் கிருஷ்ணரே. உண்மையில், கிருஷ்ணருடைய அம்சமாக விளங்குவதால் எல்லா ஜீவாத்மாக்களும் கிருஷ்ணரே. எனவே, எல்லா வேதங்களும் கிருஷ்ணரை மட்டுமே நோக்கமாகக் கொண்டுள்ளன. வேதங்களின் மூலமாக நாம் எதையெல்லாம் அறிய விரும்புகின்றோமோ, அவை கிருஷ்ணரைப் புரிந்தகொள்வதற்கான பாதையின் முன்னேற்றப்படிகளேத் தவிர வேறல்ல. அதிலும் முக்கியமாக, நமது ஸ்வரூப நிலையை தூய்மைப்படுத்த உதவும் வேத அறிவு கிருஷ்ணரைக் குறிக்கும். அதுபோல வேதக் கொள்கைகளைப் புரிந்தகொள்வதற்கு ஆவலாக இருக்கும் உயிர்வாழியும் கிருஷ்ணரின் அம்சமே; எனவே அதுவும் கிருஷ்ணரே. எல்லா வேத மந்திரங்களிலும் இருக்ககூடிய, ப்ரணவ என்ற அறிப்படும் ஓம் என்னும் தெய்வீகமாக சப்தமும் கிருஷ்ணரே, ஸாம, யஜுர், ரிக், அதர்வ ஆகிய நான்கு வேதத்தில் காணப்படும் மந்திரங்களில் பிரணவம் அல்லது ஓம்காரம் மிகவும் முக்கியமானதாக இருப்பதால், அதுவும் கிருஷ்ணரே.