Bg 7.7

மத்த: பரதரம் நான்யத்
கிஞ்சித் அஸ்தி தனஞ்ஜய
மயி ஸ்ர்வம் இதம் ப்ரோதம்
ஸூத்ரே மணி-கணா இவ
Synonyms: 
மத்த — என்னைவிட; பர-தரம் — உயர்ந்த; — இல்லை; அன்யத் கிஞ்சித் — வேறு எதுவும்; அஸ்தி — இருக்க; தனஞ்ஜய — செல்வத்தை வெல்வோனே; மயி — என்னில்; ஸர்வம் — எல்லாம்; இதம் — நாம் காணும்; ப்ரோதம் — கோர்க்கப்பட்டு; ஸூத்ரே — நூலில்; மணி-கணா — முத்துக்கள்; இவ — போல.
Translation: 
செல்வத்தை வெல்வோனே, என்னைவிட உயர்ந்த உண்மை ஏதுமில்லை. நூலில் முத்துக்கள் கோர்க்கப்பட்டுள்ளதுபோல, அனைத்தும் என்னையே சார்ந்துள்ளன.
Purport: 

பரம்பொருள், உருவமா அருவமா என்பதைப் பற்றிய தர்க்கம் பொதுவாக இருந்து வருகிறது. பகவத் கீதையைப் பொறுத்தவரை பூரண உண்மை, புருஷோத்தமரான முழுமுதற் கடவுள் ஸ்ரீ கிருஷ்ணரே; இஃது ஒவ்வொரு படியிலும் உறுதி செய்யப்படுகின்றது. பூரண உண்மை ஒரு நபரே என்னும் கருத்து, இப்பதத்தில் குறிப்பாக வலியுறுத்தப்பட்டுள்ளது. புருஷோத்தமராகிய கிருஷ்ணரே பரம உண்மை என்பது பிரம்ம சம்ஹிதையிலும் முடிவு செய்யப்பட்டுள்ளது: ஈஷ்வர: பரம: க்ருஷ்ண: ஸச்-சித்-ஆனந்த-விக்ரஹ:, அதாவது, பரம பூரண உண்மை புருஷோத்தமராகிய பாகவான் ஸ்ரீ கிருஷ்ணரே, அவரே ஆதி புருஷர், எல்லா ஆனந்தங்களின் இருப்பிடமான கோவிந்தன், பூரண ஆனந்தமும் அறிவும் நிரம்பிய நித்திய ரூபம். எல்லா காரணங்களுக்கும் காரணமான பரம புருஷரே பூரண உண்மை என்பதில் இந்த அதிகாரிகள் எவ்வித சந்தேகத்திற்கும் இடமளிக்கவில்லை. இருப்பினும் ஷ்வேதாஷ்வதர உபநிஷத்தில் (3.10) கொடுக்கப்பட்டுள்ள வேத வாக்கியத்தின் பலத்தில் அருவவாதி விவாதிக்கிறான்: ததோ யத்-உத்தரதரம் தத் அரூபம் அனாமயம்/ ய ஏதத் விதுர் அம்ருதாஸ் தே பவந்தி அதேதரே து:கம் ஏவாபியந்தி. “ஜடவுலகில், பிரபஞ்சத்தின் முதல் உயிர்வாழியான பிரம்மாவே தேவர்கள், மனிதர்கள், மற்றும் மிருகங்களுக்கு மத்தியில் பரமனாக கருதப்படுகிறார். ஆனால் பிரம்மாவிற்கு அப்பால், ஜட உருவம் இல்லாத, அனைத்து ஜடக் களங்கத்திற்கும் அப்பாற்பட்ட உன்னதமானவர் உள்ளார். அவரைப் பற்றி அறிந்தவர்களும் உன்னதமானவர்களாகின்றனர்; ஆனால் அவரை அறியாதவர்களோ, ஜடவுலகின் துன்பங்களை அனுபவிக்கின்றனர்.”

அரூபம் என்னும் சொல்லிற்கு, அருவவாதிகள் மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கின்றனர். ஆனால் இந்த அரூபம் உருவமற்றதல்ல. இது (மேலே மேற்கோள் காட்டப்பட்ட பிரம்ம சம்ஹிதையில் விளக்கப்பட்டுள்ளதுபோல) ஆனந்தமும் அறிவும் நிரம்பிய திவ்யமான நித்திய ரூபத்தைக் குறிப்பிடுகின்றது. ஷ்வேதாஷ்வதர உபநிஷத்தின் மற்ற பதங்கள் (3.8-9) இதனை பின்வருமாறு உறுதி செய்கின்றன.

வேதாஹம் ஏதம் புருஷம் மஹாந்தம்
ஆதித்ய-வர்ணம் தமஸ: பரஸ்தாத்
தம் ஏவ விதித்வாதி ம்ருத்யும் ஏதி
நான்ய: பந்தா வித்யதே (அ) யனாய

யஸ்மாத் பரம் நாபரம் அஸ்தி கிஞ்சித்
யஸ்மான் நாணீயோ நோ ஜ்யாயோ (அ) ஸ்தி கிஞ்சித்
வ்ருக்ஷ இவ ஸ்தப்தோ தி வி திஷ்டத்- யேகஸ்
தேனேதம் பூர்ணம் புருஷேண ஸ்ர்வம்

“ஜடக் கருத்துக்களின் இருளுக்கெல்லாம் அப்பாற்பட்ட திவ்யமான பரம புருஷ பகவானை நான் அறிவேன். அவரை அறிபவன் மட்டுமே பிறப்பு, இறப்பு எனும் பந்தத்தினைக் கடக்க முடியும். அந்த பரம புருஷரைப் பற்றிய இந்த ஞானத்தைவிட முக்திக்கு வேறு வழியில்லை.

“அந்த பரம புருஷரைவிட உயர்ந்த உண்மை ஏதுமில்லை; ஏனெனில், அவரே மிகவுயர்ந்தவர். அவர் மிகச்சிறியதைவிடச் சிறியவர், மிகப் பெரியதைவிடப் பெரியவர். அமைதியான மரத்தினைப் போன்று நிலை பெற்றுள்ள அவர், திவ்ய வானிற்கு ஒளியூட்டுகிறார். மரம் தனது வேர்களைப் பரப்புவதைப் போல அவர் தனது எண்ணற்ற சக்திகளைப் பரப்புகிறார்.”

இந்தப் பதங்களிலிருந்து, ஜடம், ஆன்மீகம் எனும் இரண்டு சக்திகளைக் கொண்டு எங்கும் நிறைந்துள்ள பரம புருஷ பகவானே பரம பூரண உண்மை என்பதை முடிவு செய்யலாம்.