Bg 4.35

யஜ் க்ஞாத்வா ந புனர் மோஹம்
ஏவம் யாஸ்யஸி பாண்டவ
யேன பூதான் யஷேஷாணி
த்ரக்ஷ்யஸ் யாத்மன் யதோ மயி
Synonyms: 
யத் — எதை; க்ஞாத்வா — அறிவதால்; — என்றுமில்லை; புன: — மீண்டும்; மோஹம் — மயக்கம்; ஏவம் — இது போன்ற; யாஸ்யஸி — நீ செல்வாய்; பாண்டவ — பாண்டுவின் மகனே; யேன — எதனால்; பூதானி — உயிர்வாழிகள்; அஷேஷாணி — எல்லா; த்ரக்ஷ்யஸி — நீ காண்பாய்; ஆத்மனி — பரமாத்மாவில்; — அல்லது வேறு விதமாகச் சென்னால்; மயி — என்னில்.
Translation: 
இவ்வாறு தன்னுணர்வடைந்த ஆத்மாவிடமிருந்து உண்மை ஞானத்தைப் பெற்றபின், நீ மீண்டும் மயக்கத்தில் விழ மாட்டாய். ஏனெனில், இந்த ஞானத்தின் மூலம், எல்லா உயிரினங்களையும் பரமனின் பாகமாக, வேறு விதமாகக் கூறினால் என்னுடையதாக நீ காண்பாய்.
Purport: 

தன்னுணர்வு பெற்ற ஆத்மாவிடமிருந்து (உண்மையை உள்ளபடி அறிந்தவரிடமிருந்து) ஞானத்தைப் பெறுவதன் பலன், எல்லா ஜீவன்களும் பூரண பருஷோத்தமரான பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் அம்சங்களே என்ற அறிவைப் பெறுவதாகும். கிருஷ்ணரிலிருந்து தனித்து வாழ்வதாக நினைக்கக் கூடிய எண்ணம் மாயா (மா—இல்லை, யா—இது) என்று அழைக்கப்படுகிறது. கிருஷ்ணரிடம் நமக்கு ஆக வேண்டியது ஒன்றும் இல்லை, கிருஷ்ணர் மிகச்சிறந்த வரலாற்று நபர், அருவமான பிரம்மனே பூரண சத்தியம் என்றெல்லாம் சிலர் எண்ணுகின்றனர். உண்மையில், பகவத் கீதையில் சொல்லப்பட்டுள்ளது போல, கிருஷ்ணரின் உடலிலிருந்து வரும் ஒளியே அருவப் பிரம்மனாகும். பரம புருஷ பவகானான கிருஷ்ணரே எல்லாவற்றிற்கும் காரணமாவர். பிரம்ம சம்ஹிதையில், கிருஷ்ணரே எல்லா காரணங்களுக்கும் காரணமான பரம புருஷ பகவான் என்பது தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. இலட்சக்கணக்கான அவதாரங்களும் அவரின் பல்வேறு விரிவுகளே. அதுபோலவே, ஜீவன்களும் கிருஷ்ணரின் விரிவுகளே. பல்வேறு விதத்தில் விரிவடையும் கிருஷ்ணர், தனது தனித்தன்மையை இழந்துவிடுவதாக மாயாவாதிகள் தவறாக எண்ணுகின்றனர். இத்தகு எண்ணம் ஜட ரீதியிலானது. ஒரு பொருளை பல்வேறு பின்னப் பகுதிகளாகப் பிரித்தால், அப்பொருள் தனது முந்தைய நிலையை இழந்துவிடுவதென்பது பௌதிக உலகில் நமது அனுபவமாகும். ஆனால் பூரணம் என்றால், ஒன்றுடன் ஒன்றைச் சேர்த்தாலும் ஒன்று, ஒன்றிலிருந்து ஒன்றை நீக்கினாலும் ஒன்றே என்பதை மாயாவாதிகள் புரிந்துகொள்ளத் தவறுகின்றனர். அதுவே பூரண உலகின் நியதியாகும்.

பூரணத்தின் விஞ்ஞானத்தில் நமக்கு போதிய அறிவு இல்லாததால், நாம் தற்போது மாயையினால் மயக்கப்பட்டுள்ளோம்; எனவே, நாம் நம்மை கிருஷ்ணரிடமிருந்து வேறுபட்டவர்களாக நினைக்கிறோம். கிருஷ்ணரின் பிரிந்த பகுதிகளே என்றபோதிலும், நாம் அவரிடமிருந்து வேறுபட்டவர்கள் அல்ல. உயிரினங்களின் உடலில் உள்ள வேறுபாடுகள் மாயையே (உண்மையில் இல்லாதவையே). நாம் அனைவரும் கிருஷ்ணரைத் திருப்திப்படுத்துவதற்காக உள்ளோம். கிருஷ்ணருடனான நித்தியமான ஆன்மீக உறவைவிட, உறவினர்களுடனான தனது தற்காலிகமான உடல் சம்பந்தமான உறவை மிக முக்கியமானதாக அர்ஜுனன் எண்ணியதற்கு மாயையே காரணம். கிருஷ்ணரின் நித்திய சேவகனான ஆத்மா அவரிடமிருந்து பிரிக்கப்பட முடியாதவன், அவன் அவரிமிருந்து தனித்திருப்பதாக நினைப்பது மாயை—இந்த முடிவையே கீதையின் மொத்த உபதேசங்களும் நோக்கமாக கொண்டுள்ளன. பரமனின் தனிப்பட்ட அம்சங்களான உயிர்வாழிகளுக்கு சில கடமைகள் உண்டு. நினைவுக்கெட்டாத காலத்திலிருந்து இந்தக் கடமையை மறந்துள்ள காரணத்தால், மனிதர்கள், மிருகங்கள், தேவர்கள் போன்ற பற்பல உடல்களில் அவர்கள் தங்கியுள்ளனர். பகவானுடைய திவ்யமான அன்புத் தொண்டினை மறந்துள்ளதால், இத்தகு உடல் வேறுபாடுகள் எழுகின்றன. ஆனால் கிருஷ்ண உணர்வின் மூலமாக, திவ்யமான அன்புத் தொண்டில் ஈடுப்படுத்தப்படும் போது, ஒருவன் இம்மயக்கத்திலிருந்து உடனடியாக விடுதலை அடைகிறான். இத்தகு தூய ஞானத்தை அங்கீகரிக்கப்பட்ட ஆன்மீக குருவிடமிருந்து மட்டுமே அடைய முடியும்; அதன் மூலம், ஆத்மா கிருஷ்ணருக்கு சமமானவன் என்னும் மயக்கத்தினைத் தவிர்க்க முடியும். உன்னத ஆத்மாவான கிருஷ்ணரே எல்லா உயிரினங்களையும் பாதுகாப்பவர், அப்பாதுகாப்பினை கைவிட்ட உயிர்வாழிகள் பௌதிக சக்தியினால் மயக்கப்பட்டு தம்மை தனிப்பட்டவர்களாகக் கற்பனை செய்கின்றனர்—இவற்றை அறிவதே பக்குவமான ஞானமாகும். பல்வேறு பௌதிக அடையாளங்களில் மயங்கிய இத்தகு ஆத்மாக்கள் கிருஷ்ணரை மறந்து விடுகின்றனர். இருப்பினும், இத்தகு மயங்கிய ஆத்மாக்கள் கிருஷ்ண உணர்வில் நிலைபெற்றுவிட்டால், அவர்கள் முக்தியின் பாதையில் உள்ளவர்களாக புரிந்துகொள்ளப்பட வேண்டும். இது ஸ்ரீமத் பாகவதத்திலும் (2.10.6) உறுதி செய்யப்பட்டுள்ளது, முக்திர் ஹித்வான்யதா-ரூபம் ஸ்வரூபேண வ்யவஸ்திதி:. முக்தி என்றால் கிருஷ்ணரின் நித்திய சேவகன் என்னும் தனது ஸ்வரூபத்தில் நிலைபெற்றிருப்பதாகும்.