Bg 4.13

சாதுர் வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம்
குண-கர்ம-விபாகஷ:
தஸ்ய கர்தாரம் அபி மாம்
வித்த்-யகர்த்தாரம் அவ்யயம்
Synonyms: 
சாது:-வர்ண்யம் — மனித சமுகத்தின் நான்கு பிரிவுகள்; மயா — என்னால்; ஸ்ருஷ்டம் — படைக்கப்பட்டன; குண — குணம்; கர்ம — செயல்; விபாகஷ: — பிரிவுகளாய்; தஸ்ய — அதன்; கர்தாரம் — தந்தையாக; அபி — இருந்தும்; மாம் — நான்; வித்தி — நீ அறிவாயாக; அகர்தாரம் — செய்யாதவனாக; அவ்யயம் — மாறுதலற்ற.
Translation: 
மூன்றுவித இயற்கை குணங்களுக்கும் அவற்றின் செயல்களுக்கும் ஏற்ப, மனித சமூகத்தின் நால்வகைப் பிரிவுகள் என்னால் ஏற்படுத்தப்பட்டன. இம்முறையைப் படைத்தவன் நானேயாயினும் மாற்றமற்ற என்னைச் செயல்களுக்கு அப்பாற்பட்டவனாக அறிந்துகொள்.
Purport: 

கடவுளே எல்லாவற்றையும் படைப்பவர். எல்லாம் அவரிடமிருந்தே பிறந்தன, எல்லாம் அவரிலேயே லயிக்கின்றன, அழிவிற்குப் பின் எல்லாம் அவரிலேயே தங்குகின்றன. எனவே, சமூக நிலையின் நான்கு பிரிவுகளுக்கும் அவரே படைப்பாளி. இதில் முதற் பிரிவு, ஸத்வ குணத்தில் நிலைபெற்றுள்ள, பிராமணர் என்றழைக்கப்படும் அறிஞர் குலத்தோர். அடுத்தது, சத்திரியர் என்றழைக்கப்படும் ரஜோ குணத்தில் நிலைபெற்றுள்ள ஆளும் குலத்தோர். வைசியர்கள் என்றழைக்கப்படும் வியாபாரிகள், ரஜோ குணமும் தமோ குணமும் கலந்த குணமுடையோர். தொழிலாளர்களான சூத்திரர்கள் தமோ குணத்தில் உள்ளனர். மனித குலத்தின் இந்நான்கு பிரிவுகளைப் படைத்தவராயினும்கூட, பகவான் கிருஷ்ணர் இவற்றில் எந்தப் பிரிவையும் சேர்ந்தவரல்ல; ஏனெனில், அவர் மனித சமுதாயத்தின் கட்டுண்ட ஆத்மாக்களில் ஒருவரல்ல. மனித சமுதாயம் மிருக சமுதாயத்தைப் போன்றதே; ஆனால், மிருக நிலையிலிருந்து மனிதரை உயர்த்தி, அவர்களிடம் கிருஷ்ண உணர்வை முறையாக வளர்ப்பதற்காக, மேற்கூறிய பிரிவுகள் பகவானால் படைக்கப்ட்டுள்ளன. ஒரு குறிப்பிட்ட செயலைச் செய்வதில் மனிதனுக்கு இருக்கும் நாட்டம், அவன் பெற்றுள்ள ஜட இயற்கையின் குணத்தை பொறுத்தது. குணங்களுக்கேற்ப செய்யப்படும் செயல்களின் அறிகுறிகள், இந்நூலின் பதினெட்டாம் அத்தியாயத்தில் விளக்கப்பட்டுள்ளன. அவ்வாறு இருப்பினும், கிருஷ்ண உணர்வில் இருப்பவன் பிராமணனைவிட உயர்ந்தவனாவான். பிராமணர் என்றழைக்கப்படுவோர் பரம பூரண உண்மையான பிரம்மனை அறிந்திருக்க வேண்டும் என்றபோதிலும், இவர்களில் பெரும்பாலோர் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் அருவ பிரம்மனையே நாடுகின்றனர். ஆனால், பிரம்மனின் எல்லைக்கு உட்பட்ட ஞானத்தைக் கடந்து, பரம புருஷ பகவானான ஸ்ரீ கிருஷ்ணரைப் பற்றிய ஞானத்தை அடைந்தவர், கிருஷ்ண உணர்வில் உள்ளவர் அல்லது வைஷ்ணவர் என்று அழைக்கப்படுகிறார். கிருஷ்ண உணர்வு என்பது இராமர், நரசிம்மர், வராஹர் போன்ற சுய விரிவங்கங்களைப் பற்றிய அறிவையும் உள்ளடக்கியதாகும். கிருஷ்ணர் மனித சமுதாயத்தின் நான்கு பிரிவுகளுக்கு அப்பாற்பட்டவர் என்பதால், கிருஷ்ண உணர்வில் இருப்பவனும் மனித சமுதாயத்தின் எல்லாப் பிரிவுகளுக்கும் (சமூகம், நாடு, அல்லது இனம் என்று எப்படிப் பிரித்தாலும், அதற்கு) அப்பாற்பட்டவனாவான்.