New version available here: vedabase.io

Bg 18.63

இதி தே க்ஞானம் ஆக்யாதம்
குஹ்யாத் குஹ்யதரம் மயா
விம்ருஷ்யைதத் அஷேஷேண
யதேச்சஸி ததா குரு
Synonyms: 
இதி — இவ்வாறு; தே — உனக்கு; க்ஞானம் — ஞானம்; ஆக்யாதம் — விவரிக்கப்பட்டது; குஹ்யாத் — இரகசியமானதைக் காட்டிலும்; குஹ்ய-தரம் — மிகவும் இரகசியமான; மயா — என்னால்; விம்ருஷ்ய — கவனமாகச் சிந்தித்து; ஏகத் — இதனை; அஷேஷேண — முழுமையாக; யதா — போல; இச்சஸி — நீ விரும்புவதை; ததா — அதை; குரு — செய்வாயாக.
Translation: 
இவ்வாறு இரகசியமானதைக் காட்டிலும் மிகவும் இரகசியமான ஞானத்தை உனக்கு நான் விளக்கியுள்ளேன். இதனை முழுமையாக கவனமாகச் சிந்தித்து, நீ செய்ய விரும்புவதைச் செய்.
Purport: 

ஏற்கனவே, பிரம்ம பூத ஞானத்தை அர்ஜுனனுக்கு பகவான் விளக்கியுள்ளார். பிரம்ம பூத நிலையில் இருப்பவன் இன்பம் நிறைந்தவன், அவன் ஒருபோதும் ஏங்குவதில்லை. எதையும் விரும்புவது மில்லை. இஃது இரகசியமான ஞானத்தின் பலனாகும். மேலும், பரமாத்மாவைப் பற்றிய ஞானத்தையும் கிருஷ்ணர் வெளிப்படுத்தியிருக்கிறார். இதுவும் பிரம்மனைப் பற்றிய ஞானமே, ஆனால் இஃது அதைவிட உயர்ந்ததாகும்.

இங்குள்ள யதேச்சஸிததாகுரு, “உனது விருப்பப்படி நீ செயல்படலாம்” என்னும் சொற்கள், ஜீவாத்மாவின் சின்னஞ்சிறு சுதந்திரத்தில் கடவுள் தலையிடுவதில்லை என்பதைக் காட்டுகின்றன. ஒருவன் எவ்வாறு தனது வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக் கொள்ளலாம் என்பதை பகவத் கீதையில் பகவான் விளக்கியுள்ளார். தனது இதயத்தில் வீற்றிருக்கும் பரமாத்மாவிடம் அர்ஜுனன் சரணடைய வேண்டும் என்பதே அவனுக்கு உரைக்கப்பட்ட மிகச்சிறந்த அறிவுரையாகும். முறையான பகுத்தறிவின் மூலம், பரமாத்மாவின் ஆணையின்படிச் செயல்படுவதற்கு ஒருவன் ஒப்புக்கொள்ள வேண்டும். இஃது அவன் இடையறாது கிருஷ்ண உணர்வில் (மனித வாழ்வின் மிகவுயர்ந்த நிலையில்) நிலைபெறுவதற்கு உதவியாக அமையும். போரிடும்படி முழுமுதற் கடவுளால் அர்ஜுனன் நேரடியாக ஆணையிடப்படுகின்றான். புருஷோத்தமரான முழுமுதற் கடவுளிடம் சரணடைவதே உயிர்வாழிகளின் மிகச்சிறந்த நன்மையாகும். அது முழுமுதற் கடவுளின் நன்மைக்காக அல்ல. சரணடைவதற்கு முன், இந்த விஷயத்தைப் பற்றி தனது புத்தியின் எல்லைவரை கவ6னமாகச் சிந்தித்துப் பார்ப்பதற்கு அவனுக்குச் சுதந்திரம் உண்டு; இதுவே புருஷோத்தமரான முழுமுதற் கடவுளின் கட்டளையை ஏற்பதற்கு மிகச்சிறந்த வழியாகும். அத்தகு கட்டளையினை கிருஷ்ணரின் அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதியான ஆன்மீக குருவின் மூலமாகவும் பெற முடியும்.