Bg 15.13

காம் ஆவிஷ்ய ச பூதானி
தாரயாம்-யஹம் ஒஜஸா
புஷ்ணாமி சௌஷதீ: ஸர்வா:
ஸோமோ பூத்வா ரஸாத்மக:
Synonyms: 
காம் — கிரகங்கள்; ஆவிஷ்ய — நுழைந்து; — மேலும்; பூதானி — உயிர்வாழிகள்; தாரயாமி — தாங்கிக் கொண்டுள்ளேன்; அஹம் — நான்; ஓஜஸா — எனது சக்தியால்; புஷ்ணாமி — வளப்படுத்துகின்றேன்; — மேலும்; ஒளஷதீ: — காய்கறிகள்; ஸர்வா: — எல்லா; ஸோம: — சந்திரன்; பூத்வா — ஆகி; ரஸ–ஆத்மக: — ரஸத்தை வழங்கி.
Translation: 
நான் ஒவ்வொரு கிரகத்திற்குள்ளும் நுழைகின்றேன், எனது சக்தியினால் அவை பாதையில் நிலைபெற்றுள்ளன. நான் சந்திரனாகி எல்லாக் காய்கறிகளுக்கும் வாழ்வு ரஸத்தை வழங்குகின்றேன்.
Purport: 

எல்லா கிரகங்களும் காற்றில் மிதப்பது இறைவனின் சக்தியினாலேயே என்பதை புரிந்துகொள்ள வேண்டும். இறைவன், ஒவ்வொரு அணுவிலும் ஒவ்வொரு கிரகத்திலும் ஒவ்வொரு உயிர்வாழியிலும் நுழைகின்றார். இது பிரம்ம சம்ஹிதையில் விளக்கப்பட்டுள்ளது. பரம புருஷ பகவானின் சுய விரிவுகளில் ஒருவரான பரமாத்மா, எல்லா கிரகங்கள், பிரபஞ்சங்கள், உயிர்வாழிகள், மற்றும் அணுக்களிலும்கூட நுழைவதாக அங்கு கூறப்பட்டுள்ளது. எனவே, அவர் நுழைவதால் அனைத்தும் முறையாகத் தோற்றுவிக்கப்படுகின்றன. உடலில் ஆத்மா இருக்கும்போது, மனிதன் நீரில் மிதக்க முடியும்; ஆனால் உடலை விட்டு அந்த உயிர் பிரிந்த பிறகு, அதாவது மரணத்திற்குப் பிறகு, உடல் மூழ்குகின்றது. உடல் அழுகிப் போன பிறகு குச்சிகளைப் போன்று அதுவும் மிதப்பது உண்மையே, ஆனால் மனிதன் மரணமடைந்த உடன், உடல் நீரில் மூழ்கிவிடும். அதுபோல, இவ்வெல்லா கிரகங்களும் விண்வெளியில் மிதக்கின்றன, இதற்கு காரணம் பரம புருஷ பகவானின் உன்னத சக்தி அந்த கிரகங்களினுள் நுழைந்திருப்பதே. அவரது சக்தி ஒவ்வொரு கிரகத்தையும் கைப்பிடி மண்ணைப் போன்று தாங்கிக் கொண்டுள்ளது. யாரேனும் கைப்பிடி மண்ணை பிடித்துக் கொண்டிருந்தால், மண் கீழே விழுவதற்குச் சாத்தியம் இல்லை, ஆனால் அவன் அதனை காற்றில் விட்டெறிந்தால் அது கீழே விழுந்துவிடும். அதுபோலவே காற்றில் மிதந்து கொண்டுள்ள இந்த கிரகங்கள், உண்மையில் பரம புருஷரின் விஸ்வரூபத்தின் கைப்பிடியில் இருக்கின்றன. அவரது வலிமையினாலும் சக்தியினாலும், அசைகின்ற அசையாத பொருள்கள் அனைத்தும் தத்தம் இடங்களில் நிலைத்துள்ளன. புருஷோத்தமரான முழுமுதற் கடவுளாலேயே சூரியன் பிரகாசிக்கின்றது என்றும் கிரகங்கள் நிலையாகத் தத்தம் பாதையில் செல்கின்றன என்றும் வேத மந்திரங்களில் கூறப்பட்டுள்ளன. அவரது உதவி இல்லாவிடில், காற்றில் வீசப்பட்ட மண்ணைப் போன்று எல்லா கிரகங்களும் சிதறிப்போய் அழிந்து விடும். அதுமட்டுமின்றி, புருஷோத்தமரான முழுமுதற் கடவுளாலேயே சந்திரன் எல்லா காய்கறிகளையும் வளப்படுத்துகின்றது. சந்திரனின் தாக்கத்தினால் காய்கறிகள் சுவை பெறுகின்றன. நிலவொளி இல்லாவிடில், காய்கறிகள் வளரவும் முடியாது. சுவை கொடுக்கவும் முடியாது. மனித சமுதாயம், வசதியாக வாழ்ந்தபடி உணவுப் பொருள்களை அனுபவித்துக் கொண்டிருப்பதற்கு பரம புருஷரின் கருணையே காரணம். இல்லாவிடில் மனித சமுதாயம் உயிர் பிழைக்க முடியாது. ரஸாத்மக: எனும் சொல் மிகவும் முக்கியமானது. பரம புருஷருடைய கட்டுப்பாட்டில் சந்திரனுடைய ஆதிக்கத்தினால் எல்லாம் சுவையைப் பெறுகின்றன.