Bg 10.8

அஹம் ஸவர்வஸ்ய ப்ரபவோ
மத்த: ஸர்வம் ப்ரவர்ததே
இதி மத்வா பஜந்தே மாம்
புதா பாவ-ஸமன்விதா:
Synonyms: 
அஹம் — நானே; ஸர்வஸ்ய — அனைத்தின்; ப்ரபவ: — உற்பத்தி மூலம்; மத்த: — என்னிடமிருந்தே; ஸர்வம் — எல்லாம்; ப்ரவர்ததே: — தோன்றுகின்றன; இதி — இதனை; மத்வா — அறிந்தவன்; பஜந்தே — பக்தனாகின்றான்; மாம் — எனக்கு; புதா — அறிவு சான்றவன்; பாவ-ஸமன்விதா: — மிகுந்த கவனத்தோடு.
Translation: 
ஜட, ஆன்மீக உலகங்கள் அனைத்திற்கும் மூலம் நானே. எல்லாம் என்னிடமிருந்தே தோன்றுகின்றன. இதனை நன்றாக அறிந்த அறிஞர்கள், எனது பக்தித் தொண்டில் ஈடுபட்டு, இதயப்பூர்வமாக என்னை வழிபடுகின்றனர்.
Purport: 

வேதங்களைப் பக்குவமாகப் பற்றறிந்த ஓர் அறிஞரும், சைதன்ய மஹாபிரபுவைப் போன்ற அதிகாரிகளிடமிருந்து விஷயங்களை அறிந்தவரும், அந்த உபதேசங்களை எவ்வாறு நடைமுறைப்படுத்துவது என்பதைப் புரிந்து கொண்டவரும் ஆன ஒருவர், ஜட ஆன்மீக உலகங்கள் எல்லாவற்றின் மூலம் கிருஷ்ணரே என்பதைப் புரிந்துகொள்ள முடியும். இதனை நன்றாக அறிந்துள்ள காரணத்தால், அவர் பரம புருஷரின் பக்தித் தொண்டில் திடமாக நிலை பெற முடியும். முட்டாளாலோ, அபத்தமான கருத்துரைகளாலோ, அவரை பிறழச் செய்ய முடியாது. பிரம்மா, சிவன் மற்றும் அனைத்து தேவர்களுக்கும் கிருஷ்ணரே மூலம் என்பதை எல்லா வேத இலக்கியங்களும் ஒப்புக் கொள்கின்றன. அதர்வ வேதத்தில் (கோபால-தாபனீ உபநிஷத் 1.24) யோப்ரஹ்மாணம் விததாதி பூர்வம் யோ வை வேதாம்ஷ்ச காபயதி ஸ்ம க்ருஷ்ண:—"வேத ஞானத்தை பிரம்மாவிற்கு முதலில் உபதேசித்ததும், ஆதியில் அந்த வேத ஞானத்தை பரப்பியதும் கிருஷ்ணரே" என்று கூறப்பட்டுள்ளது. பின்னர் மீண்டும் நாராயண உபநிஷத்தில்(1) அதபுருஷோ ஹ வை நாராயணோ (அ) காமயத பிரஜா: ஸ்ருஜேயேதி—"பின்னர், பரம புருஷ பகவானான நாராயணர் உயிரினங்களை படைக்க விரும்பினார்" என்று கூறப்பட்டுள்ளது உபநிஷத் தொடர்ந்து கூறுகிறது, நாராயணாத் ப்ரஹ்மா ஜாயதே, நாராயணாத் ப்ரஜாபதி: ப்ரஜாயதே, நாராயணாத் இந்த்ரோ ஜாயதே, நாராயணாத் அஷ்டௌ வஸவோ ஜாயந்தே, நாராயணாத் ஏகாதஷ ருத்ரா ஜாயந்தே, நாராயணாத் த்வாத ஷாதித்யா:"—"நாராயணரிடமிருந்தே பிரம்மா பிறந்தார். நாராயணரிடமிருந்தே பிரஜாபதிகள் பிறந்தனர். நாராயணரிடமிருந்தே எட்டு வசுக்கள் பிறந்தனர் நாராயணரிடமிருந்தே பதினொரு ருத்ரர்கள் பிறந்தனர், நாராயணரிடமிருந்தே பன்னிரண்டு ஆதித்யர்கள் பிறந்தனர்." நாராயணர் கிருஷ்ணரின் விரிவங்கமாவார்.

அதே வேதத்தில் (நாராயண உபநிஷத் 4 ) ப்ரஹமண்யோ தேவகீ-புத்ர:—தேவகியின் மைந்தனான கிருஷ்ணரே முழுமுதற் கடவுள்" என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும், ஏகோ வை நாராயண ஆஸீன் நப் ரஹ்மா ந ஈஷானோ நாபோ நாக்னி-ஸமௌ நேமே த் யாவ்-ஆப்ருதிவீ ந நக்ஷத்ராணி ந ஸூர்ய:—"படைப்பின் ஆரம்பத்தில் பரம புருஷரான நாராயணர் மட்டுமே இருந்தார். பிரம்மாவோ, சிவனோ, நீரோ, அக்கினியோ, ஆகாயத்தில் சந்திரனோ, நட்சத்திரங்களோ, சூரியனோ இருக்கவில்லை." (மஹா உபநிஷத், 1) பரம புருஷரின் நெற்றியிலிருந்து சிவபெருமான் பிறந்தார் என்றும் மஹா உபநிஷத்தில் கூறப்பட்டுள்ளது. எனவே, பிரம்மாவையும் சிவனையும் படைத்த பரம புருஷரே வழிபாட்டிற்குரியவர் என்று வேதங்கள் கூறுகின்றன.

மஹாபாரதத்தின் மோஷ தர்ம பகுதியில் கிருஷ்ணரே கூறுகிறார்:

ப்ரஜாபதிம் ச ருத்ரம் சாப் யஹம்-ஏவ ஸ்ருஜாமி வை
தௌ ஹி மாம் ந விஜானிதோ மம மாயா விமோஹிதௌ

"பிரஜாபதிகள், சிவன் உட்பட அனைவரும் என்னால் படைக்கப்பட்டவர்களே, எனது மாயசக்தியினால் கவரப்பட்டிருப்பதினால், அவர்களைப் படைத்தவன் நானே என்பதை அவர்கள் அறியாமலிருக்கிறார்கள்." வராஹ புராணத்திலும் சொல்லப்பட்டுள்ளது.

நாராயண: பரோ தேவஸ்
தஸ்மாஜ் ஜாதஷ் சதுர்முக:
தஸ்மாத் ருத்ரோ (அ)பவத் தேவ:
ஸசஸர்வ-க்ஞதாம் கத:

"நாராயணரே முழுமுதற்கடவுள்: அவரிடமிருந்தே பிரம்மா பிறந்தார். பிரம்மாவிடமிருந்தே சிவன் பிறந்தார்."

படைப்புகள் அனைத்திற்கும் மூலம் பகவான் கிருஷ்ணரே. அவர் எல்லா காரணங்களுக்கும் காரணமாக அறியப்படுகிறார். "எல்லாம் என்னிடமிருந்தே பிறந்தன என்பதால் நானே எல்லாவற்றின் மூல காரணம். அனைத்தும் எனக்கு கீழ்பட்டவை, எனக்கு மேற்பட்ட எவரும் இல்லை" என்று அவரே கூறுகிறார். கிருஷ்ணருக்கு மேற்பட்ட உன்னத ஆளுநர் எவரும் இல்லை. அங்கீகரிக்கப்பட்ட ஆன்மீக குருவின் மூலம் வேத சாஸ்திரங்களின் அடிப்படையில் கிருஷ்ணரை இவ்வாறு புரிந்துகொள்பவன். தன்னுடைய முழுபலத்தையும் கிருஷ்ண உணர்வில் ஈடுபடுத்தி, உண்மையான அறிஞனாகிறான். அவனுடன் ஒப்பிடும்போது, கிருஷ்ணரை முறையாக அறியாத அனைவருமே முட்டாள்கள்தான், முட்டாள்கள் மட்டுமே கிருஷ்ணரை ஒரு சாதாரண நபராகக் கருதுவர். கிருஷ்ண பக்தன் அத்தகு முட்டாள்களால் குழம்பக் கூடாது ;பகவத் கீதையின் மீதான அங்கீகாரமற்ற விளக்கவுரைகளையும் கருத்துக்களையும் அறவே தவிர்த்து, உறுதியுடனும் திடமாகவும் கிருஷ்ண உணர்வில் முன்னேற வேண்டும்.