Bg 10.42

அத வா பஹுனைதேன
கிம் க்ஞாதேன தவார்ஜுன
விஷ்டப் யாஹம் இதம் க்ருத்ஸ்னம்
ஏகாம்ஷேன ஸ்திதோ ஜகத்
Synonyms: 
அதவா — அல்லது; பஹுனா-பற்பல் — ஏதேன—இதுபோன்ற; கிம் — என்ன; க்ஞாதேன — அறிவதால்; தவ — உனக்கு; அர்ஜுன — அர்ஜுனா; விஷ்டப்ய — நுழைந்து; அஹம் — நான்; இதம் — இந்த; க்ருத்ஸ்னம் — அனைத்து; ஏக — ஒரு; அம்ஷேன — பகுதியால்; ஸ்தித: — நிலைபெற்ற; ஜகத் — அகிலம்.
Translation: 
ஆனால், இதனை விவரமாக அறிவதன் தேவை என்ன அர்ஜுனா? என்னுடைய சிறு அம்சத்தின் மூலமாக, நான் இந்த பிரபஞ்சம் முழுவதிலும் புகுந்து அதனைத் தாங்குகின்றேன்.
Purport: 

எல்லா பொருள்களிலும் நுழைந்திருக்கும் பரமாத்மாவாக, முழுமுதற்கடவுள் ஜடப் பிரபஞ்சங்கள் முழுவதிலும் அறியப்படுகிறார். பொருள்கள் எவ்வாறு தங்களது நிலையில் சீரும் சிறப்புமாக விளங்குகின்றன என்பதை அறிந்து கொள்வதில் அர்த்தமில்லை என்று இங்கே அர்ஜுனனிடம் பகவான் கூறுகிறார். பரமாத்மாவின் உருவில், கிருஷ்ணர் எல்லாப் பொருள்களிலும் நுழைந்திருப்பதால் மட்டுமே, அவை இருக்கின்றன என்பதை அவன் அறிந்துகொள்ள வேண்டும். பகவான், மிகப்பெரிய உயிர்வாழியான பிரம்மாவிலிருந்து சின்னஞ்சிறு எறும்பு வரை, அனைத்திலும் நுழைந்து அவற்றை பாதுகாக்கின்றார், அவரால் மட்டுமே இவையனைத்தும் நிலைத்துள்ளன.

எந்த தேவரை வழிபட்டாலும் அது பரம புருஷ பகவான் அல்லது பரம இலக்கினை நோக்கிக் கொண்டுச் செல்லும் என்ற கருத்தினை எப்போதும் முன்வைத்துக் கொண்டுள்ள மிஷன் ஒன்று உள்ளது. ஆனால் தேவர்களை வழிபடுவது இங்கே முற்றிலுமாக நிராகரிக்கப்பட்டுள்ளது. ஏனெனில், பிரம்மா, சிவன் போன்ற மாபெரும் தேவர்களும் முழுமுதற் கடவுளுடைய வைபவத்தின் சிறு பகுதியே. பிறந்தவர்கள் அனைவருக்கும் அவரே மூலம், அவரைவிடச் சிறந்தவர் எவரும் இல்லை. அவர் அஸமௌர்த் வ என்று அழைக்கப்படுகிறார். அவரைவிட உயர்ந்தவர்; எவரும் இல்லை. அவருக்கு சமமானவரும் எவரும் இல்லை என்பதே இதன் பொருள். எவனொருவன், முழுமுதற் கடவுளான கிருஷ்ணரை பிரம்மா, சிவன் உட்பட தேவர்களுக்கு சமமாகக் கருதுகின்றானோ, அவன் உடனடியாக நாத்திகனாகி விடுவதாக பத்ம புராணத்தில் கூறப்பட்டுள்ளது. மாறாக, கிருஷ்ண சக்தியின் விரிவுகளையும் வைபவங்களையும் பற்றிய பல்வேறு விவரங்களை ஆழமாகப் படித்தால், அவன் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரது நிலையை சந்தேகமின்றிப் புரிந்து கொண்டு, தனது மனதை கிருஷ்ணருடைய வழிபாட்டில் பிறழாது நிலைநிறுத்த முடியும். பகவானின் சுய விரிவாகிய பரமாத்மா, எல்லாவற்றிலும் நுழைந்துள்ளதால், அவர் எங்கும் பரவியிருப்பவராக அறியப்படுகிறார். எனவே, தூய பக்தர்கள் தங்களது மனதை பூரண பக்தித் தொண்டில் கிருஷ்ண உணர்வில் ஒருமுகப்படுத்துகின்றனர். இதன் மூலம் அவர்கள் எப்பொழுதும் திவ்யமான தளத்தில் உள்ளனர். இந்த அத்தியாயத்தின் எட்டு முதல் பதினொன்று வரையிலான பதங்களில், கிருஷ்ண வழிபாடும் பக்தித் தொண்டும் மிகத் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதுவே தூய பக்தித் தொண்டின் பாதையாகும். பரம புருஷ பகவானுடனான உறவில் எவ்வாறு ஒருவன் பக்குவத்தை அடையலாம் என்பது இந்த அத்தியாயத்தில் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணரிலிருந்து வரும் சீடப் பரம்பரையின் சிறந்த ஆச்சாரியர்களில் ஒருவரான ஸ்ரீல பலதேவவித்யாபூஷணர், இந்த அத்தியாயத்திற்கான தனது கருத்துரையை பின்வருமாறு நிறைவு செய்கிறார்.

யச்-சக்தி-லேஷோத் ஸுர்யாத்யா
பவந்த்-யத்-யுக்ர-தேஜஸ:
யத்-அம்ஷேனத்ருதம் விஷ்வம்
ஸக்ருஷ்ணோ தஷமே (அ)ர்ச்யதே

சக்தி வாய்ந்த சூரியன் தனது சக்தியை பகவான் கிருஷ்ணரது சக்தியிடமிருந்து பெறுகின்றது. மேலும் அவர் தனது அம்சத்தின் மூலமாகவே முழு உலகையும் பராமரித்து வருகிறார். எனவே, அந்த பகவான் ஸ்ரீ கிருஷ்ணரே வழிபாட்டிற்கு உரியவர்.

ஸ்ரீமத் பகவத் கீதையின் "பூரணத்தின் வைபவம்" என்னும் பத்தாம் அத்தியாயத்திற்கான பக்திவேதாந்த பொருளுரைகள் இத்துடன் நிறைவடைகின்றது.